எஞ்சா மகிழ்ச்சி இறந்து வரு பருவத்தும்;
அஞ்ச வந்த உரிமைக்கண்ணும்;
நல் நெறிப் படரும் தொல் நலப் பொருளினும்;
பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇக்
குற்றஞ் சான்ற பொருள் எடுத்து உரைப்பினும்;
`நாமக் காலத்து உண்டு' எனத் தோழி
ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்;
அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச்
சொல்லுறு பொருளின்கண்ணும்; `சொல் என,
ஏனது சுவைப்பினும், நீகை தொட்டது
வானோர் அமுதம் புரையுமால் எமக்கு!' என
அடிசிலும் பூவும் தொடுத்தற்கண்ணும்;
அந்தணர் திறத்தும், சான்றோர் தேஎத்தும்,
அந்தம் இல் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும்,
ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்; ஒழுக்கத்துக்
களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி
அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும்;
அந்தரத்து எழுதிய எழுத்தின் மான,
வந்த குற்றம் வழி கெட ஒழுகலும்;
அழியல் `அஞ்சல்' என்று ஆயிரு பொருளினும்
தான் அவள் பிழைத்த பருவத்தானும்;
நோன்மையும் பெருமையும் மெய் கொள அருளிப்
பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித்
தன்னின் ஆகிய தகுதிக்கண்ணும்;

|