புதல்வன் பயந்த புனிறு தீர் பொழுதின்,
நெய் அணி மயக்கம் புரிந்தோன் நோக்கி,
ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும்,
செய் பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்ணும்,
பயம் கெழு துணை யனை புல்லிய புல்லாது
உயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி
அல்கல் முன்னிய நிறை அழி பொழுதின்,
மெல்லென் சீறடி புல்லிய இரவினும்;
உறல் அருங்குரைமையின், ஊடல் மிகுத்தோளைப்
பிற பிற பெண்டிரின் பெயர்த்தற்கண்ணும்;
பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப்
பிரிவின் நீக்கிய பகுதிக்கண்ணும்;
நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளும்;
சென்று கையிகந்து, பெயர்த்து உள்ளிய வழியும்;
காமத்தின் வலியும்; கைவிடின் அச்சமும்;
தான் அவள் பிழைத்த நிலையின்கண்ணும்;
உடன் சேறல் செய்கையோடு அன்னவை பிறவும்
மடம் பட வந்த தோழிக்கண்ணும்;
வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்;
மீட்டு வர ஆய்ந்த வகையின்கண்ணும்;
அவ் வழிப் பெருகிய சிறப்பின்கண்ணும்;
பேர் இசை ஊர்திப் பாகர் பாங்கினும்;

|