ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும்;
வணங்கு இயல் மொழியான் வணங்கற்கண்ணும்;
புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும்;
சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும்,
"மாண் நலம் தா" என வகுத்தற்கண்ணும்;
பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும்,
சூள்நயத் திறத்தால் சோர்வு கண்டு அழியினும்,
"பெரியோர் ஒழுக்கம் பெரிது!" எனக் கிளந்து
பெறு தகை இல்லாப் பிழைப்பினும், அவ் வயின்,
உறு தகை இல்லாப் புலவியுள் மூழ்கிய
கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்ணும்;
உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின்
உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று
தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும்;
அருமைக் காலத்துப் பெருமை காட்டிய
எண்மைக் காலத்து இரக்கத்தானும்;
பாணர், கூத்தர், விறலியர், என்று இவர்
பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்;
நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர்,
காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும்;
பிரியும் காலை எதிர் நின்று சாற்றிய
மரபுடை எதிரும் உளப்படப் பிறவும்,
வகை பட வந்த கிளவி எல்லாம்
தோழிக்கு உரிய' என்மனார் புலவர்.

|