இதன் பொருள் - திருமுடிமேற் சூடப்படுங் கண்ணி கார்காலத்து மலரும் நறிய கொன்றைப்பூ; அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும் அக் கொன்றைப்பூ; ஏறப்படுவது தூய வெளிய ஆனேறு; மிக்க பெருமை பொருந்திய கொடியும் அவ்வானேறென்று சொல்லுவர்; நஞ்சினது கறுப்பு, திருமிடற்றை அழகு செய்தலும் செய்தது; அக்கறுப்பு, தான் மறுவாயும் வானோரை உய்யக்கொண்டமையின், வேதத்தைப் பயிலும் அந்தணராற் புகழவும்படும்; பெண் வடிவு ஒருபக்கமாயிற்று; ஆய அவ்வடிவுதான், தன்னுள்ளே ஒடுக்கி மறைக்கினும் மறைக்கப்படும்; பிறை, திருநுதற்கு அழகாயது. அப்பிறைதான் பெரியோன் சூடுதலால், பதினெண் கணங்களாலும் புகழவும்படும்; எவ்வகைப்பட்ட உயிர்களுக்கும் காவலாகிய, நீர் தொலைவறியாக் குண்டிகையானும் தாழ்ந்த திருச்சடையானும் சிறந்த செய்தற்கரிய தவத்தையுடையோனுக்கு |