பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
பாஅல்புளிப்பினும் பகலிருளினும்
நாஅல்வேத நெறிதிரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ வத்தை யடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தண ரருங்கட னிறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே. திணை - பாடாண்டிணை. துறை - செவியறிவுறூஉ; வாழ்த்தியலுமாம். சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது. (இ - ள்.) அணுச்செறிந்த நிலனும், அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும், அவ்வாகாயத்தைத் தடவிவரும் காற்றும், அக்காற்றின்கண் தலைப்பட்ட தீயும், அத்தீயோடு மாறுபட்ட நீருமென ஐவகைப்பட்ட பெரிய பூதத்தினது தன்மைபோலப் பகைவர் பிழைசெய்தால் அப்பிழையைப் பொறுத்தலும், அப்பிழை பொறுக்குமளவல்லவாயின் அவரை அழித்தற்கு உசாவும் உசாவினது அகலமும், அவரை அழித்தற்கேற்ற மனவலியும் சதுரங்கவலியும், அவ்வாற்றால் அவரை அழித்தலும், அவர் வழிபட்டால் அவர்க்குச் செய்யும் அருளுமுடையோய்! நினது கடற்கட்டோன்றிய ஞாயிறு பின்னும் நினது வெளிய தலைபொருந்திய திரையையுடைய மேல்கடற்கண்ணே மூழ்கும் புதுவருவாய் இடையறாத ஊர்களையுடைய நல்ல நாட்டிற்குவேந்தே! வானவரம்ப!
|