பொன்னாற் செய்யப்பட்ட வீரக்கழல் புனைந்தகாலினையும் பூசிப்புலர்ந்த சந்தனத்தையுடைத்தாகிய குறுக்ககன்ற பரந்த மார்பினையு முடையோய்! ஊரில்லாதனவும், பொறுத்தற்கரிய உயங்குதலையுடையனவும், நீரில்லாதனவும், நீண்ட வழியனவுமாகிய, வம்பலரை நலியச் சேய்மைக் கண்ணே பார்த்திருக்கும் இருப்பினையும், கையாற்கவிக்கப்பட்ட கண்ணாற் குறித்துப் பார்க்கும் பார்வையையும், செவ்விய தொடை பிழையாத தறுகண்மையையுமுடைய மறவர்தாம் அம்பை விடுதலாற் பட்டோரது உடன்மூடிய புதியகற்குவையின்மேலே திருந்திய சிறகினையும் வளைந்த வாயினையுமுடைய பருந்திருந்து வருந்தும் உன்னமரத்தினையுடையவாகிய அணுகுதற்கரிய கவர்த்த வழியின்கண்ணே நின்பால் நச்சிய விருப்பத்தால் இரப்போர் வருகுவர்; அங்ஙனம் வருவது, அவர் மனக்குறிப்பை அவர் முகத்தானறிந்து அவருடைய வறுமையைத் தீர்த்தலை வல்ல தன்மையான் -எ-று. |