(இ - ள்.) உவாநாளின் மதியினது வடிவுபோலும் வடிவினையுடைய உயர்ந்த வெண்கொற்றக்குடை நிலைபெற்ற கடலெல்லைக்கண் நிலத்தை நிழற் செய்ய, காவலாகிய வீரமுரசம் இழுமென முழங்கும் ஓசையையுடைத்தாய் முழங்க, சக்கரத்தைச் செலுத்திய ஈரமுடைய நெஞ்சினையும் ஒழியாத வண்மையையுமுடைய பாண்டியர் மரபினுள்ளாய்! குற்றமற்ற கற்பினையுடைய சேயிழைக்குத் தலைவ! பொன்னானியன்ற பட்டத்தையுடைய புகரணிந்த மத்தகத்தினையும், அணுகுதற்கரிய வலியையும், மணநாறும் மதத்தினையுமுடைய, கொம்பு படைக்கலமாகக் கொண்டு பகைவர் மதிலின்கட் கதவைக் குத்திக் கயிற்றாற் பிணித்தலைச்செய்த கவிழ்ந்த மணியையணிந்த பக்கத்தையும் பெருங்கையையுமுடைய யானையினது பெரிய கழுத்திடத்தே யிருந்து பரிகாரமில்லாத கூற்றத்தினது பொறுத்தற்கரிய கொலைத்தொழிலுக்கு இளையாத வலிய கையின் கண்ணே ஒள்ளிய வாளினையுடைய பெரும்பெயர்வழுதி! நிலம் பிறழினும் நினது ஆணையாகிய சொற் பிறழாதொழியல்வேண்டும் |