எயிற்கதவிடாஅக் கயிறுபிணிக்கொண்டவென இயைத்துரைப்பாருமுளர். ஊரில்ல உயவரிய நீரில்ல நீளிடையவாகிய உன்னமரத்த கவலையெனவும், பருந்திருந்துயவும் துன்னருங்கவலையெனவும் இயையும். மருக, கணவ, வழுதி, மார்ப, இரவலர் வருவர்; அஃது அவர் இன்மை தீர்த்தல்வன்மையான்; அதனால், நின்சொற் பெயராதொழியல் வேண்டுமெனக் கூட்டி வினைமுடிவுசெய்க. வாழ்த்தியலாதல் விளங்க, வேண்டுமென ஒரு சொல் தந்துரைக்கப்பட்டது. (4)
வாள், வலந்தர மறுப்பட்டன
செவ்வானத்து வனப்புப்போன்றன
தாள், களங்கொளக் கழல்பறைந்தன
கொல்ல் லேற்றின் மருப்புப்போன்றன
தோல், துவைத்தம்பிற் றுளைதோன்றுவ
நிலைக்கொராஅ விலக்கம் போன்றன
மாவே, எறிபதத்தா னிடங்காட்டக்
கறுழ்பொருத செவ்வாயான்
எருத்துவவ்விய புலிபோன்றன
களிறு, கதவெறியாச் சிவந்துராஅய்
நுதிமழுங்கிய வெண்கோட்டான்
உயிருண்ணுங் கூற்றுப்போன்றன
நீயே, அலங்குளைப் பரீஇயிவுளிப்
பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி
மாக்கட னிவந்தெழுதரும்
செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ
அனையை யாகன் மாறே
தாயி றூவாக் குழவி போல
ஓவாது கூஉநின் னுடற்றியோர் நாடே. திணை - வஞ்சி; துறை - கொற்றவள்ளை. சோழன் உருவப்பஃறேரிளஞ்சேட்சென்னியைப் பரணர் பாடியது. (இ - ள்.) வாள் வெற்றியைத் தருதலாற் குருதிக்கறைபட்டன, செக்கர் வானத்தினது அழகையொத்தன; கால்புடை பெயர்ந்துபோர் செய்து களத்தைத் தமதாக்கிக்கொள்ளுதலால் வீரக்கழல் அருப்புத்தொழில் பறைந்தவை, கொல்லும் ஆனேற்
|