கூட்டி வினைமுடிவுசெய்க. ஒழுகவென்னுமெச்சம் (1) நுகருமென ஒருசொல் வருவித்து அதனோடு கூட்டி முடிக்கப்பட்டது; ஒழுகவும் போகம் நுகரவும் வேண்டி யெனினும் அமையும். வேண்டி, பொறாது, துரப்ப என நின்ற வினையெச்சங்கள் ஒடுங்காவென்னும் பெயரெச்சமறையின் முதனிலையோடு முடிந்தன. இனி, ‘பகல்விளங்கலை‘ என்னும் பாடத்திற்குத் திங்கண்மண்டிலமாக்கி, ‘மாறிவருதி’ என்பதற்குத் தேய்ந்தும் வளர்ந்தும் வருதியெனவும் பிறவும் அதற்கேற்ப வுரைப்ப. (9)
ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவி னெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, இயன்மொழி) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை நெட்டிமையார் பாடியது. (இ - ள்.) ஆவும், ஆனினதியல்பையுடைய அந்தணரும், மகளிரும், நோயுடையீரும், பாதுகாத்துத் தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய பிண்டோதகக்கிரியையைப் பண்ணும் பொன்போலும் பிள்ளைகளைப் பெறாதீரும் எம்முடைய அம்பை விரையச் செலுத்தக்கடவேம், நீர் நுமக்கு அரணாகிய இடத்தை அடையுமென்று அறநெறியைச் சொல்லும் மேற்கோளினையும் அதற்கேற்ற மறத்தினையுமுடைய, கொல்யானைமேலே எடுக்கப்பட்ட கொடி
|