பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது. (இ - ள்.) பாணர் பொற்றாமரைப் பூவைச் சூடவும், புலவர் பட்டம் பொலிந்த மத்தகத்தையுடைய யானையுடனே அலங்கரிக்கப்பட்ட தேரினை ஏறுதற்கேற்ப அமைக்கவும், அறனோ இவ்வாறு செய்தல்? வென்றி மாட்சிமைப்பட்ட குடுமி ! வேற்றரசருடைய நிலத்தை அவர்க்கு இன்னாவாகக் கொண்டு நின்னுடைய பரிசிலரிடத்து இனியவற்றைச் செய்வை - எ - று. குடுமி! பிறர்மண் இன்னாவாகக்கொண்டு, மலையவும் பண்ணவும் நின் ஆர்வலர் முகத்து இனியசெய்வை; இது நினக்கு அறனோ? சொல்லு வாயாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. மற்று : அசைநிலை. இது பழித்ததுபோலப் புகழ்ந்ததாகக் கொள்க. (13)
இவனியா ரென்குவை யாயி னிவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்
மறலி யன்ன களிற்றுமிசை யோனே
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்
சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே
நோயில னாகிப் பெயர்கதி லம்ம
பழன மஞ்ஞை யுகுத்த பீலி
கழனி யுழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே. திணை - பாடாண்டிணை; துறை - வாழ்த்தியல். சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி கருவூரிடஞ்செல்வானைக் கண்டு சேரமானந்துவஞ் சேரலிரும்பொ
|