மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒண்ணுதன் மகளிர் கைம்மை கூர
அவிரறல் கடுக்கு மம்மென்
குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே. திணை - வாகை; துறை - அரசவாகை. அவனைக் கல்லாடனார் பாடியது. (இ - ள்.) மீன் விளங்கும் வானத்தின்கண் பரந்த இருள் நீங்க ஓங்கிச் செல்லுதல் முறைமையையுடைய தனது தன்மையிற் பிழையாது வலிய வெம்மை முறுகிய உட்குப்பொருந்திய ஞாயிறு நிலாவிளங்கும் திங்களுடனே நிலத்தைப் பொருந்தினாற்போலப் பகைத்தற்கரிய வலியையுடைய வஞ்சினங்கூறிய இருவேந்தரை வருத்துதற்கரிய போர்க்களத்தின்கண்ணே மாயப் பொருது அவருடைய வாராற் பிணிப்புற்ற முரசத்தைக் கொண்டகாலத்து நின்றநிலையிலே நின்று நின்னைச் சூழ்ந்து கொண்ட வீரரைப் புரிந்தெறிதலால் திண்ணிய கொளுத்துக் கலங்கிக் கெடுதல் பிழைத்தது, நினது வேல்; செழிய! முலைபொலிந்த மார்பம் அழல அறைந்துகொண்டு அறிவுமயங்கியுற்ற அளவற்ற அழுகையாரவாரத்தையுடைய ஒண்ணுதல் மகளிர் கைம்மைநோன்பிலே மிக விளங்கும் அறலை யொக்கும் அழகிய மெல்லிய குவிந்த கரிய மயிரினைக் கொய்த பரிசைக் கண்டு-எ - று. செழிய! மகளிர் கூந்தல்கொய்தல்கண்டு நின்வேல் சிதைதல் உய்ந்ததெனக் கூட்டுக. ஈண்டுச் செலன்மரபெனவும், ஐம்பாற்குவையிருங்கூந்தலெனவும் பாடமோதுவாருமுளர். உய்ந்தன்றோ; ஓ: அசைநிலை. (26)
நளிகட லிருங்குட்டத்து
வளிபுடைத்த கலம்போலக் களிறுசென்று களனகற்றவும் களனகற்றிய வியலாங்கண் ஒளிறிலைய வெஃகேந்தி அரைசுபட வமருழக்கி உரைசெல முரசுவௌவி முடித்தலை யடுப்பாகப் புனற்குருதி யுலைக்கொளீஇத் தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின் அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்ற மாக மன்ன ரேவல் செய்ய மன்னிய வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு மாற்றா ரென்னும் பெயர்பெற் றாற்றா ராயினு மாண்டுவாழ் வோரே. திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை) அவனை மாங்குடிகிழார் பாடியது. (இ - ள்.) பெரிய கடலின்கட் பெரிய ஆழத்திடத்துக் காற்றாற் புடைக்கப்பட்ட மரக்கலம் நீரைக் கிழித்து ஓடுமாறுபோலக் களிறு சென்று போர்க்களத்தை இடமகலச்செய்ய அவ்வாறு களமகலச்செய்த பரந்த இடத்தின்கண் விளங்கிய இலையையுடைய
|