புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   345
Zoom In NormalZoom Out

வண்ண நீவிய வணங்கிறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகென
மாட மதுரையுந் தருகுவ னெல்லாம்
பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள்
தொன்னிலக் கிழமை சுட்டி னன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமட் குரூஉத்திரள் போலவவன்
கொண்ட குடுமித்தித் தண்பணை நாடே. 

திணை: பாடாண்டிணை ;  துறை : இயன்மொழி. அவனை   அவர் பாடியது.

(இ    - ள்.)நமது சுற்றத்தினது அடுகலத்தை நிறைக்கும் பொருட்கு
விலையாக   நெடிய  துகிற்கொடியினையுடைய  பூவாத  வஞ்சியையும்
தருகுவன்; நிறமுடைய கலவை பூசப்பட்ட  வளைந்த சந்தினையுடைய 
முன்கையினையும்  வேய்போன்ற தோளினையும் ஒள்ளிய  நுதலினையு
முடைய    விறலியர்    பூவிற்கு     விலையாகப்    பெறுகவென்று
மாடத்தையுடைய மதுரையையும் தருகுவன்; ஆதலால்,    யாமெல்லாம்
அவனைப்     பாடுவோமாக     வாரீர்  பரிசின்மாக்கள்!    பழைய
நிலவுரிமையைக் குறிப்பின், நல்ல அறிவையுடைய குயக்குலத்திளையோர்
கலம்  வனைதற்குத்  திகிரிக்  கண்ணே   வைத்த  பச்சைமண்ணாகிய
கனத்த  திரள்போல  அவன்  கருத்திற்கொண்ட     முடிபையுடைத்து,
இக்    குளிர்ந்த   மருத நிலத்தையுடைய நாடு-எ - று.

பூவாவஞ்சியென்றது, கருவூர்க்கு வெளிப்படை.

ஒன்றோவென்றது, எண்ணிடைச்சொல்.

தேர்க்கா லென்றது தேர்க்கால்போலும் திகிரியை.

அவன்   கொண்ட   குடுமித்து,   இந்நாடு;  ஆதலால்,  வஞ்சியையும்
தருகுவன்; மதுரையையும் தருகுவன்; ஆதலால்,

பரிசின்மாக்கள்!  நாமெல்லாம்  அவனைப்  பாடுகம் வம்மினோவெனக்
கூட்டுக.

தொன்னிலைக்கிழமையென்று பாடமோதுவாருமுளர். 

(33) கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்றசை சொரிந்த வட்டியு மாய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பு நிறைய
ஏரின் வாழ்நர் பேரி லரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப வுகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்
ஏழெயிற் கதவ மெறிந்துகைக் கொண்டுநின்
பேழ்வா யுழுவை பொறிக்கு மாற்றலை
பாடுநர் வஞ்சி பாடப் படையோர்
தாதெரு மறுகிற் பாசறை பொலியப்
புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும்
செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை