அத்தையும், ஆங்கவும், மதியும் அசைநிலை, நினவ எனவவென ஈற்று நின்ற அகரங்கள் செய்யுள்நோக்கி விரிக்கப்பட்டன. நாடுகெழு செல்வத்துப் பீடுகெழுவேந்தே! நினவ கூறுவல்; எனவகேண்மதி; குடை வருந்திய குடி மறைப்பதுவாகும்; கூர்வேல்வளவ! பதனெளியோர் உறைவேண்டுபொழுதிற் பெயல்பெற்றோராவர்; ஆகையால், நீயும் அவ்வாறு காலம் எளியையாய்க் கொற்றமும் ஈன்றதன் பயனென்று கருதிக் காவலர்ப்பழிக்கும் இக்கண்ணகன் ஞாலமென்று கொண்டு நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது பாரமோம்பிப் புறந்தருகுவையாயின், நின்னடி புறந்தருகுவர், அடங்காதோரென்றமையால், செவியறிவுறூஉவாயிற்று.
(36) அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீயளந் தறிதிநின் புரைமை வார்கோற்
செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்
கருங்கைக் கொல்ல னரஞ்செ யவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரந் தடியு மோசை தன்னூர்
நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப
ஆங்கினி திருந்த வேந்தனொ டீங்குநின்
சிலைத்தார் முரசங் கறங்க
மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே.
திணை - வஞ்சி; துறை - துணைவஞ்சி. அவன் கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர்கிழார் பாடியது. (இ - ள்.)கொல்வாயாயினும் கொல்லாது ஒழிவாயாயினும் அவற்றால் நினக்கு வரும் உயர்ச்சி யாம் சொல்லவேண்டா; நீயே எண்ணியறிவை; செறிந்த உள்ளிடு பருக்கையையுடைய சிலம்பினையும் நீண்ட கோற்றொழிலாற் செய்யப்பட்ட குறிய வளையையுமுடைய மகளிர் பொன்னாற் செய்யப்பட்ட கழலான் வேதிகை போல உயர்ந்த எக்கர்க்கண்ணே இருந்து விளையாடும் அணுமையையுடைய குளிர்ந்த ஆன்பொருந்தத்தினது வெளிய மணல் சிதற வலிய கையையுடைய கொல்லன் அரத்தாற் கூர்மைசெய்யப்பட்ட அழகிய வாயினையுடைத்தாகிய நெடிய கையையுடைய கோடாலி வெட்டுதலான் நின்றநிலைகலங்கி வீழும் பூ நாறுகின்ற நெடிய கொம்புகள் தனிப்பக் காக்கள்தோறும் காவன்மரங்களை வெட்டுமோசை தன்னுடைய ஊரின்கண் நெடியமதிலெல்லையில் தனது காவலையுடைய கோயிற்கண்ணே சென்றொலிப்ப அவ்விடத்து மானமின்றி இனிதாகவிருந்த வேந்தனுடன் இவ்விடத்து நினது இந்திரவிற்போலும் மாலையையுடைய முரசொலிப்பப் பொருதாயென்பதுகேட்டார்க்கு நாணும் தகுதியையுடைத்து; ஆதலால், அப்போரை ஒழியத்தகும்-எ-று. வார்கோற் குறுந்தொடியென மாறியுரைக்கப்பட்டது. இனிதிருந்தவென்றது, குறிப்புமொழி. கடிமரந்தடியுமோ
|