கண்ணே வெயிலுண்டாகவேண்டினும் நீ வேண்டிய பொருளை உண்டாக்கும் வலியையுடையையாகலின், நினது நிழற்கண்ணே பிறந்து நினது நிழற்கண்ணே வளர்ந்த எமது நினைவெல்லை சொல்ல வேண்டுமோ? வேண்டாவன்றே; இனிய நிலையையுடைத்தாகிய பொற்பூப் பொருந்திய கற்பகக்காவையுடைய நல்ல விண்ணுலகத்தவரும் தாம் செய்த நல்வினையாலுள்ள இன்பத்தின் பக்கத்தைப் பொருந்துவதல்லது, செல்வமுடையோர் வறியோர்க்கு வழங்குதலும் வறியோர் செல்வமுடையோர்பாற் சென்றிரத்தலும் ஆண்டுச் செய்யக்கடவதல்லாமையான், அது செயலறவுடைத்தெனக் கருதி, அவ்விடத்து நுகரும் நுகர்ச்சி இவ்விடத்தும் கூடுதலான், நின்னாட்டை நினைப்பர் பரிசிலர்; பகைவர்தேயத்திருந்தும், நின்னாடு நின்னையுடைத் தென்று கருதி ஆதலால் - எ - று. மற்று : அசை. வேந்தே! நீ வேண்டியது விளைக்கும் ஆற்றலையாகலின், விண்ணுல கத்து நுகர்ச்சி ஈண்டுங்கூடலின், ஒன்னார் தேயத்திருந்தும், பரிசிலர், நின் நாடு நின்னையுடைத்தென்று நின்நாட்டையுள்ளுவர்; ஆதலான், நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த எம்மளவு எவனோவென மாறிக்கூட்டுக. (39)
புறவி னல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோனிறை துலாஅம் புக்கோன் மருக
ஈதனின் புகழு மன்றே சார்தல்
ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறற்
றூங்கெயி லெறிந்தநின் னூங்கணோர் நினைப்பின்
அடுதனின் புகழு மன்றே கெடுவின்று
மறங்கெழு சோழ ருறந்தை யவையத்
தறநின்று நிலையிற் றாகலி னதனால்
முறைமைநின் புகழு மன்றே மறமிக்
கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோட்
கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ
யாங்கன மொழிகோ யானே யோங்கிய
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்
டிமயஞ் சூட்டிய வேம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் றொலைய
வாடா வஞ்சி வாட்டுநின்
பீடுகெழு நோன்றாள் பாடுங் காலே. திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, இயன்மொழி) அவனை மாறோக்கத்து நப்பசலையார்
|