பன எதிர்மறைவினையெச்சமுற்று. கையவென்பது, வினையெச்ச வினைக்குறிப்புமுற்று. (45)
இரும்பனை வெண்டோடு மலைந்தோ னல்லன்
கருஞ்சினை வேம்பின் றெரியலோ னல்லன்
நின்ன கண்ணியு மார்மிடைந் தன்றே, நின்னொடு
பொருவோன் கண்ணியு மார்மிடைந் தன்றே
ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியே
இருவீர் வேற லியற்கையு மன்றே, அதனாற்
குடிப்பொரு ளன்றுநுஞ் செய்தி கொடித்தேர்
நும்மோ ரன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி யுவகை செய்யுமிவ் விகலே. திணை - வஞ்சி; துறை - துணைவஞ்சி. சோழன் நலங்கிள்ளி உறையூர்முற்றியிருந்தானையும் அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் கோவூர்கிழார் பாடியது. (இ - ள்.) பெரிய பனையினது வெளிய தோட்டைச் சூடினோனல்லன்; கரிய கோட்டினையுடைய வேம்பினது தாரையுடையோனல்லன்; நின்னுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக் கட்டப்பட்டது; நின்னுடன் பொருவானுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக் கட்டப்பட்டது; ஆதலால், நும்முள், ஒருவீர் தோற்பினும் தோற்பது நுங்குடியன்றோ? இருவீரும் வெல்லுதல் இயல்புமன்று; ஆதலால், நுங்குடிக்குத்தக்கதொன்றன்று நுமது செய்கை; கொடியாற் பொலிந்த தேரையுடைய நும்மைப்போலும் வேந்தர்க்கு உடம்பு பூரிக்கும் உவகையைச் செய்யும், இம்மாறுபாடு; ஆதலான், இது தவிர்தலே நுமக்குத் தக்கது.-எ - று. நினகண்ணியுமென்பது, நின்னகண்ணியுமென விகாரமாயிற்று. அதனாலென்பதனை ஒழித்தும் பாடமோதுப. இது சந்துசெய்தலால் துணைவஞ்சியாயிற்று. (46)
நீயே, புறவி னல்ல லன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே, புலனுழு துண்மார் புன்க ணஞ்சித்
தமதுபகுத் துண்ணுந் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண் டழூஉ மழாஅன் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கணோ வுடையர்
கேட்டனை யாயினீ வேட்டது செய்ம்மே. திணையும் துறையும் அவை. (வஞ்சி, துணைவஞ்சி)சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கிடுவுழிக் கோவூர்கிழார் பாடி உய்யக்கொண்டது. (இ - ள்.)நீதான், புறவின் அல்லலன்றியும் பிறவும் உற்ற துன்பம் பலவற்றையும் தீர்த்த சோழனுடைய மரபிலுள்ளாய்; இவர்தாம், அறிவான் உழுதுண்ணுங் கற்றோரது வறுமையை யஞ்சித் தம்முடைய பொருளைப் பகுத்துண்ணும் குளிர்
|