புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   365
Zoom In NormalZoom Out

கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கண்ணா றும்மே கானலந் தொண்டி
அஃதெம் மூரே யவனெம் மிறைவன்
அன்னோற் படர்தி யாயி னீயும்
எம்மு முள்ளுமோ முதுவா யிரவல
அமர்மேம் படூஉங் காலைநின்
புகழ்மேம் படுநனைக் கண்டன மெனவே.

திணை  -  பாடாண்டிணை;   துறை  -  புலவராற்றுப்படை.சேரமான்
கோக்கோதைமார்பனைப் பொய்கையார் பாடியது.

கோதையுடையமாரபிற்கு   அணிந்த கோதையானும்,  அக்கோதையைப்
புணர்ந்த  மகளிர்சூடிய  கோதையானும்,  கரிய கழியின் கண் மலர்ந்த
நெய்தற்பூவானும் தேன் நாறாநிற்கும் கானலையுடைய தொண்டி; அஃது
எம்முடைய    ஊர்   ;   அவன்   எம்முடைய   தலைவன்;   அத்
தன்மையோனிடத்தே     போகின்றாயாயின்,     நீயும்    எம்மையும்
நினைப்பாயாக;  முதிய  வாய்மையையுடைய  இரவல!  நீ அமரின்கண்
மேம்படுங்காலத்து  நினக்கு  உளதாகிய  புகழை மேம்படுத்துமவனைக்
கண்டேம் யாமெனச் சொல்லி-எ - று.

இரவல!   நீயும்   அன்னோற்   படர்குவையாயின்  நின்புகழ்மேம்படு
நனைக் கண்டனமென எம்மையும் உள்ளெனக் கூட்டுக.

கண்டனமென   எம்முமுள்ளென்றாரேனும்,  உள்ளிக்  கண்டனமெனச்
சொல்லென்பது கருத்தாகக் கொள்க.

மோ  :  முன்னிலை  அசைச்சொல்.  நீயுமென்பதூஉம்,  எம்முமென்ப
தூஉம் எச்சவும்மை.

தலைவனது     இயல்பையும் ஊரையுங் கூறி,  முதுவாயிரவல! எம்மும்
உள்ளெனத்    தன்    தலைமைதோன்றக்    கூறினமையால்,    இது
புலவராற்றுப்படை ஆயிற்று.

(49) நாட னென்கோ வூர னென்கோ
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்ப னென்கோ
யாங்கன மொழிகோ வோங்குவாட் கோதையைப்
புனவர் தட்டை புடைப்பி னயல
திறங்குகதி ரலமரு கழனியும்
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ளொருங் கெழுமே.

திணையும்     துறையும்     அவை;     துறை-இயன்மொழியுமாம்.
(பாடாண்டிணை)அவனை அவர் பாடியது.

(இ - ள்.)குறிஞ்சிநிலமுடைமையால்,  நாடனென்று  சொல்லுவேனோ?
மருதநிலமுடைமையால்,    ஊரனென்று   சொல்லுவேனோ?   நெய்த
னிலமுடைமையால், ஒலிமுழங்குகின்ற குளிர்ந்த கடலையுடைய சேர்ப்ப
னென்று  சொல்லுவேனோ? எவ்வாறு சொல்லுவேன்மேம்பட்ட வாளை
யுடைய  கோதையை? புனங்காப்போர் கிளிகடிகருவியைப் புடைப்பின்,
அப்புனத்திற்கு     அயலாகிய     வளைந்த     நெற்கதிர்சுழலும்
வயலின்கண்ணும், மிக்கநீரையுடைய கடற்கரையின்கண்ணும் உளவாகிய
புட்கள் சேர எழுமாதலான்-எ - று.

‘புனவர்தட்டைபுடைப்பின்’  எனக் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் ஏற்பக்
கூறினமையான்,    நாடனென்பதூஉம்    அவ்விரண்டு   நிலத்துக்கும்
கொள்ளப் படும்; எனவே முல்லைநிலமும் உடையனென்றவாறாம்.

புனவர்     தட்டைபுடைப்பின்,     கழனியிலும்     சேர்ப்பினும்
புள்ளெழுமாதலால், கோதையை யாங்கனம் மொழிகோவெனக் கூட்டுக.