புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   368
Zoom In NormalZoom Out

களைப்     போன்ற   குளிர்ந்த  பெரிய மென்மையும்,    மழையைப்
போன்ற   வண்மையுமென்ற   மூன்றையுமுடையையாகி   இல்லாதோர்
இல்லையாக   நீ  நெடுங்காலம்  வாழ்வாயாக,  நெடுந்தகாய்!  தாழ்ந்த
நீரையுடைய  கடலின்கண் வெளிய தலையையுடைய திரை அலைக்கும்
செந்திலிடத்து   நெடிய  முருகவேள்  நிலைபெற்ற  அழகிய  அகன்ற
துறைக்கண்  பெருங்  காற்றுத்திரட்டுதலால்  குவிந்த  வடு  அழுந்திய
எக்கர் மணலினும் பலகாலம் - எ - று.

‘குணம்கொல்லாது’   என்பதற்கு   முறைமையழிய  நீ  வேண்டியவாறு
செய்யாதெனினுமாம்.

பூந்தார்மாற!     நெடுந்தகாய்!   நான்குடன்மாண்டதாயினும்,   அரசின்
கொற்றம் அறநெறிமுதற்று; அதனால் கோல்கோடாது, குணங்கொல்லாது,
ஆண்மையும் சாயலும் வண்மையும் உடையையாகி இல்லோர் கையற நீ
மணலினும் பலகாலம் நீடுவாழியவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

(56) ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்
கடல்வளர் புரிவளை புரையு மேனி
அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்
மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
ஞாலங் காக்குங் கால முன்பிற்
றோலா நல்லிசை நால்வ ருள்ளும்
கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
வலியொத் தீயே வாலி யோனைப்
புகழொத் தீயே யிகழுந ரடுநனை
முருகொத் தீயே முன்னியது முடித்தலின்
ஆங்காங் கவரவ ரொத்தலின் யாங்கும்
அரியவு முளவோ நினக்கே யதனால்
இரவலர்க் கருங்கல மருகா தீயா
யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்
தாங்கினி தொழுகுமதி யோங்குவாண் மாற
அங்கண் விசும்பி னாரிரு ளகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவுங் குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்
நின்று நிலைஇய ருலகமோ டுடனே.

திணை - அது; துறை - பூவைநிலை. (பாடாண்டிணை)

அவனை மதுரைக்கணக்காயனார்மகனார் நக்கீரனார் பாடியது.

(இ - ள்.)  ஆனேற்றை    வெற்றியாக    உயர்த்த   அழல்போலும்
விளங்கிய   சடையினையும்  விலக்குதற்கரிய  மழுப்படையையுமுடைய
நீலமணி  போலுந்  திருமிடற்றையுடையோனும், கடற்கண்ணே வளரும்
புரிந்த   சங்கையொக்கும்  திருநிறத்தையுடைய  கொலையைவிரும்பும்
கலப்பையையும்    பனைக்கொடியையுமுடையோனும்,    கழுவப்பட்ட
அழகிய   நீலமணி   போலும்   திருமேனியையும்   வானுற  ஓங்கிய
கருடக்கொடியையுமுடைய        வென்றியை       விரும்புவோனும்,
நீலமணிபோலும்   நிறத்தையுடைய   மயிற்கொடியை  எடுத்த  மாறாத
வெற்றியையுடைய    அம்மயிலாகிய    ஊர்தியையுடைய    ஒள்ளிய
செய்யோனுமென்று  சொல்லப்பட்ட  உலகங்காக்கும்  முடிவுகாலத்தைச்
செய்யும்  வலியினையும்  தோல்வியில்லாத  நல்ல  புகழினையுமுடைய
நால்வருள்ளும்,  விலக்குதற்கரிய  வெகுட்சியாற்  கூற்றத்தை  ஒப்பை;
வலியால்   வாலியோனை  ஒப்பை;  புகழாற்  பகைவரைக்  கொல்லும்
மாயோனை ஒப்பை; கருதியது முடித்தலான்

முருகனை  ஒப்பை;  அப்படி  அப்படி  அவரை  அவரை ஒத்தலான்
எவ்விடத்தும் அரியனவு