புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   369
Zoom In NormalZoom Out


ந்த      நிழலையுடையராய்    வாழ்வாரது    மரபினுள்ளார்;  இவர்
இப்பொழுது   களிற்றைக்   கண்டு  தம்  இளமையால்  தாம்  முன்பு
வெருவியழு   கின்ற  அழுகையை  மறந்த  புல்லிய  தலையையுடைய
சிறுபிள்ளைகள்; மன்றை வெருவிப்பார்த்து முன்பு அறியாத புதியதோர்
வருத்தத்தையுடையர்;   இது   கேட்டாயாயின்,   நீ   விரும்பியதைச்
செய்வாயாக-எ - று. 

தண்ணிழல்வாழ்நர் சிறாஅரென இயைப்பினும் அமையும். 

அழாஅல் களிறுகண்டு மறந்தவெனக் கூட்டுக. 

நீ     புறா  முதலாயினவற்றின்    துயர்தீர்த்தற்கு    உயிர்க்கொடை
பூண்டோன்   மருகனாதலானும்,   இவர்   கற்றோர்   வறுமையஞ்சிப்
பகுத்துண்ணும்   தண்ணிழல்வாழ்நர்   மரபினுள்ளாராதலானும்  இவர்
நின்னால் அருளத்தகி னல்லது முனியத்தகாரென்பதாம். 

இதுவும்,   இவரைக்  கொல்லாமற்  சந்துசெய்வித்தலின  துணைவஞ்சி
ஆயிற்று. 

(47) வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
நெடிய வென்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்ற மருத்தி
ஓம்பா துண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ வின்றே, திறப்பட
நண்ணார் நாண வண்ணாந் தேகி
ஆங்கினி தொழுகி னல்ல தோங்குபுகழ்
மண்ணாள் செல்வ மெய்திய
நும்மோ ரன்ன செம்மலு முடைத்தே. 

திணையும்  துறையும்   அவை.   (வஞ்சி,    துணைவஞ்சி)   சோழன்
நலங்கிள்ளியுழைநின்று     உறையூர்புகுந்த   இளந்தத்த    னென்னும்
புலவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி  ஒற்றுவந்தா   னென்று
கொல்லப்புக்குழிக் கோவூர்கிழார் பாடி உய்யக்கொண்டது. 

(இ - ள்.)  வண்மையையுடையோரை   நினைத்துப்   பழுமரந்தேரும்
பறவைபோலப்  போகி நெடியவென்றுகருதாது அரியவழி பலவற்றையுங்
கழிந்து   திருந்தாத   நாவால்  தாம்வல்லபடி  பாடி  ஆண்டுப்பெற்ற
பரிசிலான்  மகிழ்ந்து சுற்றத்தையூட்டித் தாமும் பொருளைப்பாதுகாவாது
உண்டு  உள்ளம்  மலர்ந்து  வழங்கித்  தம்மைப்  புரப்போராற்பெறும்
சிறப்பு  ஏதுவாக வருந்தும் இப்பரிசிலான் வாழும் வாழ்க்கை, பிறர்க்குச்
செய்யும்    கொடுமை    யறிந்ததோவெனின்,    இல்லை;  கூறுபடக்
கல்விமுகத்தால்  தம்மொடு  மலைந்தோர்  நாணத்  தமது  கல்வியான்
வென்று  தலையெடுத்து  நடந்து  அவ்விடத்து இனிதாக ஒழுகினல்லது,
உயர்ந்த  புகழுடைய  நிலமாளும் திருப்பொருந்திய நும்மை யொக்கும்
தலைமையுமுடைத்து-எ - று. 

ஓங்கியவென்பதூஉம், செல்வமுமுடைத்தென்பதூஉம் பாடம். 

சுரம்பல கடந்து புள்ளிற் போகியென மாறிக் கூட்டுக. 

பரிசில்வாழ்க்கை     நும்மோரன்ன   செம்மலுமுடைத்து;   ஆதலால்,
நண்ணார்   நாண   இனிதொழுகினல்லது  பிறர்க்குத்  தீதறிந்தன்றோ?
இன்றெனக் கூட்டுக. 

இக்கோவூர்கிழார்  தாமும்  பரிசில்வாழ்நருள்  ஒருவராதலான், ‘வடியா
நாவின் வல்லாங்குப் பாடி’ எனப் பணிந்துகூறினாரென்க. 

(48) கோதை மார்பிற் கோதை யானும்