இது, நானிலமுமுடையனாதலிற் பெருஞ்செல்வமுடையன்; நீ அவன்பாற் செல்லென ஆற்றுப்படுத்தவாறு; அவனது இயல்பைப் புகழ்ந்தமையான் இயன்மொழியுமாயிற்று. (50) மாசற விசித்த வார்புறு வள்பின் மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை ஒலிநெடும் பீலி யொண்பொறி மணித்தார் பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை யுருகெழு முரசம் மண்ணி வாரா வளவை யெண்ணெய் நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை அறியா தேறிய வென்னைத் தெறுவர இருபாற் படுக்குநின் வாள்வா யொழித்ததை அதூஉஞ் சாலுநற் றமிழ்முழு தறிதல் அதனொடு மமையா தணுக வந்துநின் மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென வீசி யோயே வியலிடங் கமழ இவணிசை யுடையோர்க் கல்ல தவண துயர்நிலை யுலகத் துறையு ளின்மை விளங்கக் கேட்ட மாறுகொல் வலம்படு குருசினீ யீங்கிது செயலே. திணை - அது; துறை - இயன்மொழி. (பாடாண்டிணை) சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை முரசுகட்டில் அறியாதேறிய மோசிகீரனைத் தவறு செய்யாது அவன் துயிலெழுந்துணையும் கவரிகொண்டு வீசியானை மோசிகீரனார் பாடியது. (இ - ள்.) குற்றந்தீர வலித்துப் பிணித்த வாரப்பட்ட வாரையுடைய கருமரத்தாற் செய்தலான் இருட்சிபொருந்திய பக்கம் பொலிவு பெற மயிலினது தழைத்த நெடிய பீலியால் தொடுக்கப்பட்ட ஒள்ளிய பொறியை யுடைத்தாகிய நீலமணிபோலும் நிறத்தையுடைய தாரைப் பொற்றளிரையுடைய உழிஞையுடனே பொலியச் சூட்டப்பட்டுக் குருதிப் பலிகொள்ளும் விருப்பத்தையுடைய உட்குப்பொருந்திய வீரமுரசம் நீராடிவருவதன் முன்னே எண்ணெயினது நுரையை முகந்தாற் போன்ற மெல்லிய பூவையுடைய கட்டிற்கண்ணே இதனை முரசுகட்டி லென்பதறியாது ஏறிக்கிடந்த என்னை வெகுட்சிதோன்ற இருகூறாக்கும் நின்னுடைய வாளை வாயை மாற்றியதாகிய அதுவும் அமையும், நல்ல தமிழ்முழுதும் அறிந்தமைக்கு; அவ்வெகுட்சியொழிந்து அதனாலும் அமையாதே குறுக வந்து நினது வலியையுடைய முழவுபோலும் தோளையெடுத்துச் சாமரத்தாற் குளிர வீசினாய்; இவ்வகன்ற உலகத்தின்கண்ணே பரக்கும்பரிசு இவ்வுலகத்துப் புகழுடையோர்க்கல்லது, அவ்விடத்ததாகிய உயர்ந்த நிலைமையையுடைய உலகத்தின்கண் உறைதலில்லாமையைத் தெரியக்கேட்ட பரிசாலேயோ வெற்றி பொருந்தப்பட்ட தலைவா! நீ இவ்விடத்து இச்சாமரையை வீசுதல்? அதற்குக் காரணம் சொல்லுவாயாக-எ - று. சூட்டியென்பதனைச் சூட்டவென்று திரிப்பினும் அமையும். உழிஞை - கொற்றான்; அது குடநாட்டார் வழக்கு. முழவுத்தோளோச்சியெனவும், தண்ணெனவீசியோயெனவும் கூறிய வாற்றால், சாமரையென்பது பெற்றாம். கமழ்தல் ஈண்டுப் பரத்
|