தல்லது, பாதுகாத்தலை ஏற்றுக் கொண்டு மழை நாணும்படி
எப்பொருளையும் வரையாது தன்பாற்சென்ற வர்கட்கு இடக்கவிந்த
கையால் அமையாது கொடுக்கும் வண்மையையுடைய கடுமான்
கோதையது வலியோடு மாறுபட்டெழுந்திருந்த வஞ்சினங்கூறிய வேந்தர்
கருதுங்காலத்து, பசிய இலையால் தொடுக்கப்பட்ட
தழைக்கண்ணியையும் மாசுண்ட உடையையும் மடித்த வாயையுமுடைய
இடையன் சிறிய தலையையுடைய ஆட்டினத்தினோடு கூட அணுகல்
செல்லாத புலி தங்கும் அகன்ற நிலத்தை யொக்கும், வலி தங்கிய
பெரிய கையையுடையவனுடைய நாடு-எ - று.
எங்கோனிருந்தமூதூர்ப்புகுதல், இரவலர்க்கு எளிது; அவனுடைய
நாடு, மன்னர் நினைக்குங்காலை, இடையன் சிறுதலையாயமொடு
குறுகல் செல்லாப் புலிதுஞ்சு வியன்புலத்தற்றெனக் கூட்டி
வினைமுடிவுசெய்க.
மன்னர்க்கு இடையனும், அவர்படைக்குச் சிறுதலையாயமும்,
கோதை நாட்டிற்குப் புலிதுஞ்சு வியன்புலமும் உவமையாகக் கொள்க.
உவலைக்கண்ணியென்றதனைப் பெயராகக் கொள்க.
புலியுடை வியன்புலமென்பதூஉம் பாடம்.
(55) ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல
வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவரும் என
நான்குடன் மாண்ட தாயினு மாண்ட
அறநெறி முதற்றே யரசின் கொற்றம்
அதனால், நமரெனக் கோல்கோடாது
பிறரெனக் குணங்கொல்லாது
ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்
திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையு மூன்றும்
உடையை யாகி யில்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறைக்
கடுவளி தொகுப்ப வீண்டிய
வடுவா ழெக்கர் மணலினும் பலவே.
திணை - பாடாண்டிணை; துறை - செவியறிவுறூஉ. பாண்டியன்
இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறனை மதுரை
மருதனிளநாகனார் பாடியது.
(இ - ள்.) உயர்ந்தமலையாகிய பெரியவில்லைப் பாம்பாகிய நாணைக்
கொளுத்தி ஒப்பில்லாததோர் அம்பைவாங்கி மூன்றுமதிலையும் எய்து
பெரிய வலியையுடைய தேவர்கட்கு வெற்றியைக்கொடுத்த கரியநிறஞ்
சேர்ந்த திருமிடற்றையுடைய இறைவனது அழகிய திருமுடிப்பக்கத்து
அணிந்த பிறைசேர்ந்த திருநெற்றிக்கண்ணே விளங்கும் ஒரு திரு
நயனம்போல மூவேந்தருள்ளும் மேம்பட்ட பூந்தாரையுடைய மாற!
கடிய சினத்தை யுடையவாகிய கொல்களிறும் விரைந்த
செலவையுடையவாகிய மனஞ்செருக்கிய குதிரையும் நெடிய
கொடியையுடையவாகிய உயர்ந்த தேரும் நெஞ்சுவலியையுடைய
போரைவிரும்பும் மறவருமென நான்கு படையுங்கூட
மாட்சிமைப்பட்டதாயினும் மாட்சிமைப்பட்ட அறநெறியை முதலாக
வுடைத்து வேந்தரது வெற்றி; அதனால், அவர் நம்முடையரென அவர்
செய்த கொடுந்தொழிலைப் பொறுத்துக் கோல் வளையாது, இவர் நமக்கு
அயலாரென்று அவர் நற்குணங்களைக் கெடாது, ஞாயிற்றைப் போன்ற
வெய்யதிறலையுடைய வீரமும், திங்