முளவோ நினக்கு? ஆதலால், இரப்போர்க்குப் பெறுதற்கரிய
அணிகலங்களைப் பெரிதும் வழங்கி, யவனர் நல்ல குப்பியிற்
கொடுவரப்பட்ட குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய தேறலைப் பொன்னாற்
செய்யப்பட்ட புனைந்த கலத்தின் கண்ணே ஏந்தி நாடோறும் ஒள்ளிய
வளையையுடைய மகளிர் ஊட்ட மகிழ்ச்சி மிக்கு இனிதாக நடப்பாயாக;
வென்றியானுயர்ந்த வாளையுடைய மாற! அழகிய இடத்தையுடைய
வானத்தின்கண்ணே நிறைந்த இருளைப்போக்கும் வெய்ய
கதிரையுடைய ஞாயிற்றையொப்பவும் மேலைத்திக்கிற்றோன்றும்
குளிர்ந்த கதிரையுடைய பிறையைப்போலவும் இவ்வுலகத்தோடுகூட
நின்று நிலை பெறுவாயாக-எ-று.
பிணிமுகம்-பிள்ளையாரேறும் யானையென்றும் சொல்லுப.
காலமுன்பென்றது, தம்மை யெதிர்ந்தோர்க்குத் தாம்
நினைந்தபொழுதே முடிவுகாலத்தைச் செய்யும் வலியை (புறநா. 41 :
1-3)
மணிமிடற்றோனைக் கூற்றமென்றது, அழித்தற்றொழிலையுடைமையான்.
வாலியோனென்றது, நம்பிமூத்தபிரானை (பலதேவரை, ; கலித். 26:1, ந.)
இகழுநரடுநனென்றது மாயோனை.
ஆரிருளகற்றும் வெங்கதிர்ச்செல்வனென்றது எழுகின்றஞாயிற்றை.
மதி-இளம்பிறை.
இது, தேவரோடு உவமித்தமையாற் பூவைநிலை ஆயிற்று.
(57) வல்லா ராயினும் வல்லுந ராயினும்
புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன
உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற
நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்
நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்
டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க
நனந்தலைப் பேரூ ரெரியு நைக்க
மின்னுநிமர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்
கடிமரந் தடித லோம்புநின்
நெடுநல் யானைக் கந்தாற் றாவே.
திணை-வஞ்சி; துறை-துணைவஞ்சி. அவனைக் காவிரிப்பூம்பட்டினத்துக்
காரிக்கண்ணனார் பாடியது.
(இ - ள்.) யாதொருகல்வியை மாட்டாராயினும் அதனை
வல்லாராயினும் புகழ்தலைப் பொருந்தியவர்கட்கு மாயோனையொத்த
சொல்லுதலமைந்த தலைமையையுடைய புகழ் அமைந்த மாற! நினது
ஒரு காரியஞ் சொல்லுதலுடையேன் ; அது யாதெனின், நின்பகைவர்
நாட்டைக் கொள்ளுங்காலத்து அவர் நாட்டின்கண் வளைந்த
கதிரையுடைய வயலை நின்னுடைய வீரரும் கொள்ளைகொள்க; அகலிய
இடத்தையுடைய பெரிய ஊரைத் தீயுஞ் சுடுக; மின்நிமிர்ந்தாற்போன்ற
நினது பாடஞ் செய்கின்ற விளங்கிய நெடிய வேல் பகைவரை
அழிக்கினும் அழிக்க; யாவதும் காவன்மரத்தை வெட்டுதலைப்
பாதுகாப்பாயாக, நின்னுடைய நெடிய நல்ல யானைகட்கு முன்பு
நட்டுநிற்கின்ற தறிகள் ஆற்றமாட்டாவாதலான்-எ-று.
அவை இளமரமாதலால், நின் நெடுநல்யானைக்குத் தறியாதற்குப்
பொறையாற்றாவென்று உரைப்பாருமுளர்.
வல்லவர்க்கும் மாட்டார்க்கும் ஒப்பப்புகழ்ந்து முடியவொண்ணா
மையான், மாயோனன்னவென்றார்; அன்றி அவ்விருவர்க்கும் ஒப்ப
அருள் பண்ணுதலின், அவ்வாறு கூறிற்றெனினும் அமையும்.
மாற! நின்யானைக்குக் கந்து ஆற்றாவாதலால், கடிமரந்தடிதலோம்
பெனக் கூட்டுக.
நின்யானைக்குக் கந்து ஆற்றாவாதலாற் கடிமரந்தடிதலோம்பெனக்
கூறுவான்போற் சந்துசெய்விக்கும் நினைவாற் கூறினமையின், இது
துணைவஞ்சி