ஆயிற்று.
(58) நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே
முழுமுத றொலைந்த கோளி யாலத்துக்
கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ
இளைய தாயினுங் கிளையரா வெறியும்
அருநரை யுருமிற் பொருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவ ரேறே நீயே
அறந்துஞ் சுறந்தைப் பொருநனை யிவனே
நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென
வரைய சாந்தமுந் திரைய முத்தமும்
இமிழ்குரன் முரச மூன்றுட னாளும்
தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே
பானிற வுருவிற் பனைக்கொடி யோனும்
நீனிற வுருவி னேமி யோனுமென்
றிருபெருந் தெய்வமு முடனின் றாஅங்
குருகெழு தோற்றமொ டுட்குவர விளங்கி
இன்னீ ராகலி னினியவு முளவோ
இன்னுங் கேண்மினும் மிசைவா ழியவே
ஒருவீ ரொருவீர்க் காற்றுதி ரிருவீரும்
உடனிலை திரியீ ராயி னிமிழ்திரைப்
பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே
அதனால், நல்ல போலவு நயவ போலவும்
தொல்லோர் சென்ற நெறிய போலவும்
காத னெஞ்சினும் மிடைபுகற் கலமரும்
ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளா
தின்றே போல்கநும் புணர்ச்சி வென்றுவென்
றடுகளத் துயர்கநும் வேலே கொடுவரிக்
கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே.
திணை-பாடாண்டிணை; துறை-உடனிலை. சோழன் குராப்பள்ளித்துஞ்சிய
பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய
பெருவழுதியும் ஒருங்கிருந்தாரைக் காவிரிப்பூம்பட்டினத்துக்
காரிக்கண்ணனார் பாடியது.
(இ - ள்.) நீ, குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவன்,
பரிய அடி மாய்ந்த கோளியாகிய ஆலத்துக் கொழுவிய நிழலையுடைய
நெடிய கொம்பை அதன்வீழ் தாங்கினாற்போலத் தனக்கு
முன்னுள்ளோர் இறந்தாராகத் தான் தளராது நல்லபுகழையுடைய
பழைய குடியைத் தடுமாற்றமற அணைத்துத் தான் சிறிதேயாயினும்
கிளையுடனே பாம்பை எறியும் பொறுத்தற்கரிய வெள்ளிய
உருமேறுபோல இளமைக் காலத்தும் பகைவரைக் காணப்பொறாத
போரின்கண் மாட்சிமைப்பட்ட பாண்டியர் குடியுள் ஏறுபோல்வான்; நீ,
அறந்தாங்கும் உறையூரின்கண் அரசன்; இவன், நெல்லும் நீரும்
யாவர்க்கும் எளியவெனக் கருதி அவைபோலாது யாவர்க்கும்
பெறுதற்கரிய பொதியின் மலையிடத்துச் சந்தனமும் கடலிடத்து
முத்துமென இவற்றை ஒலிக்கும் குரலையுடைய முரசம் மூன்றுடனே
ஆளும் தமிழ் பொருந்திய மதுரைக்கட் குளிர்ந்த செங்கோலையுடைய
வேந்தன்; நீர், பால்போலும் நிறத்தையுடைய
பனைக்கொடியையுடையோனும் நீலநிறம்போலும் திருமேனியையுடைய
ஆழியையுடையோனுமென்று சொல்லப்படும் இரண்டு பெரிய
தெய்வமும் ஒருங்கு நின்றாற்போல உட்குப்பொருந்திய காட்சியோடு
அச்சம்வர விளங்கி இத்தன்மையீராகுதலின், இதனினும் இனிய
பொருள் உளவோ? இன்னமும் கேளீர்; நும்முடைய புகழ் நெடுங்காலம்
செல்வதாக; நும்முள் ஒருவீர் ஒருவீர்க்கு உதவுவீராக, நீங்களிருவீரும்
கூடி நிற்கின்ற இந்நிலையின் வேறுபடீராயின்