பாரம் பொறுக்கும் பகட்டை யொக்கும் எங்கோன், வென்றியாக
முழங்கும் முரசினையும் தப்பாத வாளினையும் உடைய வளவனது
வெயிலை மறைத்தற்கு எடுத்த உட்குப் பொருந்திய
தலைமையையுடைய தாமம் பொருந்திய வெண்கொற்றக் குடையை
ஒக்குமெனக் கருதி-எ-று.
செம்மீன் இமைக்கும் விசும்பின் உச்சி நின்றமதியை
உவமித்தமையின், இது தலைப்பெயலுவமையாய் நின்றது.
கானல்-கடற்கரை.
வெயிலென்றது. பகைவரானும் கொடியேரானும் வரும் வெம்மையே.
இராச்சியத்தைப் பொறுத்துநடத்துமாறு நோக்கி நோன்பகட்டோடு
உவமித்தமையின், இறப்ப இழிந்த ஆனந்தவுவமை அன்றாயிற்று.
உவாமதியைக் கண்டு வளவன்வெண்குடையை ஒக்குமென விறலியும்
யானும் பலகால் தொழுதேமல்லேமோவெனக் கூட்டி வினைமுடிவு
செய்க.
வளவன் வெண்குடையைக்காட்டித் தொழுமினென்றார்க்கு நிறைமதி
தொழப்படாதாயினும், குடையோடு ஒப்புமைகண்டு தொழுத யாம்
குடைதன்னைக் கண்டால் தொழுதல் சொல்லவேண்டுமோவென அதன்
சிறப்புக் கூறியவாறு.
செம்மீன்-திருவாதிரையுமாம்.
(61) கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமா ணெய்த லாம்பலொடு கட்கும்
மலங்குமிளிர் செறுவிற் றளம்புதடிந் திட்ட
பழன வாளைப் பரூஉக்கட் டுணியல்
புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை யாக
விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்
வன்கை வினைஞர் புன்றலைச் சிறாஅர்
தெங்குபடு வியன்பழ முனையிற் றந்தையர்
குறைக்க ணெடும்போ ரேறி விசைத்தெழுந்து
செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும்
வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன்
எஃகுவிளங்கு தடக்கை யியறேர்ச் சென்னி
சிலைத்தா ரகல மலைக்குந ருளரெனிற்
றாமறி குவர்தமக் குறுதி யாமவன்
எழுவுறழ் திணிதோள் வழுவின்று மலைந்தோர்
வாழக் கண்டன்று மிலமே தாழாது
திருந்தடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்ட லதனினு மிலமே.
திணை-வாகை; துறை-அரசவாகை. சோழன் இலவந்திகைப்பள்ளித்
துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர்
மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
(இ - ள்.) கொண்டையாகிய மயிரையும் குளிர்ந்த தழையையும்
உடைய கடைசியர் சிறிய மாட்சிமையுடைய நெய்தலை ஆம்பலுடனே
களையும் மலங்கு பிறழ்கின்ற செய்யின்கண்ணே தளம்புதுணித்து
இடப்பட்ட பொய்கையிடத்து வாளையினது பரிய இடத்தையுடைய
தடியைப் புதிய நெல்லினது வெள்ளி சோற்றிற்கு மேலீடாகக் கொண்டு
விலாப்புடைப்பக்கம் விம்மவுண்டு நெடிய கதிரையுடைய
கழனியினிடத்துச் சூட்டை இடுமிடம் அறியாது தடுமாறும் வலிய
கையையுடைய உழவர் புல்லியதலையையுடைய சிறுவர் தெங்குதரும்
பெரிய பழத்தை வெறுப்பின், தந்தையருடைய தலை குவியாமல்
இடப்பட்ட குறைந்த இடத்தையுடைய நெடிய போரின்கண்ணே யேறி
உகைத்தெழுந்து வளவிய கோட்புக்க பனையினது பழத்தைத்
தொடுதற்கு முயலும், நாடோறும் புதுவருவாயையுடைய நல்ல நாட்டிற்கு
வேந்தனாகிய வேல்விளங்கும் பெரியகையினையும் இயற்றப்பட்ட
தேரினையுமுடைய சென்னியது இந்திரவிற்போலும் மாலையையுடைய
மார்போடும் மாறுபடுவோருளராயின், தாமறிகுவர் தமக்குற்ற காரியம்;
யாங்கள், அவனுடைய கணையமரத்தோடு மாறுபடும் திணிந்த
தோளைத் தப்பின்றாக மாறுபட்டோர் வாழக் கண்டதும் இலமே;
விரைய அவனது திருந்திய அடியை அடையவல்லோர்
வருந்தக்காண்டல் அவ்வாழக் கண்டதனினும் இலம்-எ-று.
தளம்பென்றது சேறுகுத்தியை.
வழுவின்று மலைதலாவது வெளிப்பட நின்று மலைதல்.