பாய்ந்தென வேந்தரும் பொருதுகளத் தொழிந்தன ரினியே என்னா வதுகொ றானே கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் பாசவன் முக்கித் தண்புனற் பாயும் யாண ரறாஅ வைப்பிற் காமர் கிடக்கையவ ரகன்றலை நாடே. திணையும் துறையும் அவை. (தும்பை, தொகைநிலை) அவரை அக்களத்திற் பரணர் பாடியது. (இ - ள்.) எத்துணையும் பலவாகிய யானையும், அம்பாற்கலங்கி இனிமேல் உண்டாக்கும் போரின்றிப் படையிடத்துப் பட்டன; வெற்றிப்புகழ் மாட்சிமைப்பட்ட குதிரையெல்லாம், ஆண்மைக் கேற்ற வீரக்கூறுபாட்டையுடைய மேலாட்களுடனே அக்களத்தே பட்டன; தேர்கொடுவர வந்த போரிற்கு அமைந்தோரெல்லாம் தாம் பிடித்த பரிசை (கேடகம்) தம் கண் மறைப்பச் சேரப்பட்டனர்; வாரால் விசிக்கப்பட்டுத் தொழில் மாட்சிமைப்பட்ட மயிர்சீவாது போர்க்கப்பட்ட கண்ணையுடைய முரசமெல்லாம், பரிப்பார் படுதலான் இருந்துகெட்டன; சாந்தமைந்த மார்பின் கண்ணே நெடியவேல் பாய்ந்தனவாக அரசரும் பொருது அக்களத்தின்கண்ணே மடிந்தனர்; இனி, என்ன வருத்தமுறுவதோதான்?கழனிக்கண் ஆம்பற்றண்டாற் செய்த வளையணிந்த கையினையுடைய மகளிர் செவ்வி அவலை முக்கிக் குளிர்ந்த புனற்கண்ணே பாயும் புதுவருவாய் அறாத ஊர்களையுடைய அழகிய கிடையையுடைய அவரது அகன்ற இடத்தையுடைய நாடு-எ -று. அன்னோ என்னாவதுகொலென்று பாடமோதுவாரும் உளர். நாடுதான் என்னாவதுகொலெனக் கூட்டுக. நாடென்னும் ஒருமைநோக்கி, என்னாவதுகொலென ஒருமையாற் கூறப்பட்டது. (64) நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கிச் செல்லா மோதில் சில்வளை விறலி களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை விசும்பா டெருவை பசுந்தடி தடுப்பப் பகைப்புல மரீஇய தகைப்பெருஞ் சிறப்பிற் குடுமிக் கோமாற் கண்டு நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே. திணை - பாடாண்டிணை; துறை - விறலியாற்றுப்படை. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது. (இ - ள்.) நல்ல யாழையும் சிறுபறையையும் ஒருதலைமாக்கிணையுடனே கட்டிப் போவேமல்லேமோ? சொல்லுவாயாக, சிலவளையையுடைய விறலி! யானை யணிபொருத இடமகன்ற பாசறைக்கண் ஆகாயத்தின்கண்ணே பறக்கும் எருவையைப் பசிய ஊன்றடி தகைப்ப மாற்றார் தேயத்தின்கண்ணே மருவிய அழகிய பெரிய செல்வத்தினையுடைய முதுகுடுமியாகிய கோமானைக் கண்டு மிக்க நீரான் அடப்பட்ட புற்கையைக் கைவிட்டு வருவதற்கு-எ - று. எருவை - தலைவெளுத்து உடல் சிவந்திருக்கும் பருந்து; கழுகெனினும் அமையும். விறலி! குடுமிக்கோமாற்கண்டு புற்கையை நீத்தனம் வரற்குச் செல்லாமோவெனக் கூட்டிவினைமுடிவு செய்க. தகைப்பருஞ் சிறப்பினென்பதூஉம் பாடம். (65) மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப இருங்கட் குழிசி கவிழ்ந்திழுது மறப்பச் சுரும்பார் தேறல் சுற்ற மறப்ப உழவ ரோதை மறப்ப விழவும் அகலு ளாங்கட் சீறூர் மறப்ப உவவுத்தலை வந்த பெருநா ளமயத் திருசுடர் தம்மு ணோக்கி யொருசுடர் புன்கண் மாலை மலைமறைந் தாங்குத் தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த புறப்புண் ணாணி மறத்தகை மன்னன் வாள்வடக் கிருந்தன னீங்கு நாள்போற் கழியல ஞாயிற்றுப் பகலே. திணை - பொதுவியல்; துறை - கையறுநிலை. சேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாற்பெருவளத்தானோடு பொருது புறப்புண்ணாணி வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது. (இ - ள்.) முழா மார்ச்சனையிடுதலொழிய, யாழ் பண்ணையொழிய, பெரிய இடத்தையுடைய பானை பாலின்மையிற் கவிழ்ந்து நெய்கடைதலையொழிய, தம்முடைய கிளை வண்டார்ந்த மதுவை உண்ணாதொழிய, உழுவார் தொழில்செய்யும் ஓசையையொழிய, அகன்ற தெருவினையுடைய சீறூர் விழாவினையொழிய, உவாவந்துகூடிய பெரிய நாளாகிய பொழுதின்கண் ஞாயிறும் திங்களுமாகிய இருசுடரும் தம்முள் எதிர்நின்று பார்த்து அவற்றுள் ஒரு சுடர் புல்லிய மாலைப்பொழுதின்கண் மலையுள்ளே யொளித்தாற்போலத் தன்னையொக்கும்வேந்தன் |