புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   377
Zoom In NormalZoom Out


பிசிரென்னும்       ஊரின்கண்    ஆந்தையுடைய    அடிக்கீழென்று
சொல்லின்,  மாட்சிமையையுடைய  நினது  இன்புறும்   பேடை பூணத்
தனது விருப்பமுறும் நல்ல அணிகலத்தை அளிப்பன், நினக்கு-எ-று.

‘ஆடுகொள்வென்றி’  என்பதற்கு  வென்றியுள் மிக்க வென்றியெனினும்
அமையும்.

குறும்பறையென்றது பேடையை.

வாயில்விடாதென்றதற்கு     வாயில்காவலர்   விடவேண்டாதெனினும்
அமையும்.    முகிழ்நிலாவென்பது   ஒருசொன்னடைத்தாய்   மதியம்
முகிழ்நிலா  விளங்குமென முதல்வினைகொண்டது; மதியம் முகிழ்க்கும்
நிலாவெனினும் அமையும்.

ஆந்தையடியுறை     யென்பதற்கு     ஆந்தைநின்     அடிக்கண்
உறைவானென்றுரைப்பாரும் உளர்.

பேடையணிய   நன்கலம்   நல்குவ   னென்பதனாற்பயன்:   மறவாது
போதல்வேண்டுமென்னும் நினைவாயிற்று.

(68) உடும்புரித் தன்ன வென்பெழு மருங்கிற்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது
சில்செவித் தாகிய கேள்வி நொந்துநொந்
தீங்கெவன் செய்தியோ பாண பூண்சுமந்
தம்பகட் டெழிலிய செம்பொறி யாகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை
புனிறுதீர் குழவிக் கிலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி மரங்கொன் மலிநீர்
மன்பதை புரக்கு நன்னாட்டுப் பொருநன்
உட்பகை யொருதிறம் பட்டெனப் புட்பகைக்
கேவா னாகலிற் சாவேம் யாமென
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
தணிபறை யறையு மணிகொ டேர்வழிக்
கடுங்கட் பருகுநர் நடுங்குகை யுகுத்த
நறுஞ்சே றாடிய வறுந்தலை யானை
நெடுநகர் வரைப்பிற் படுமுழா வோர்க்கும்
உறந்தை யோனே குருசில்
பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே.

திணை - அது; துறை - பாணாற்றுப்படை.  (பாடாண்டிணை)  சோழன்
நலங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடியது.

(இ - ள்.)    உடும்புரித்தாற்போன்ற                எலும்பெழுந்த
விலாப்புடையையுடைய  சுற்றத்து  மிக்கபசியைத் தீர்ப்பாரைக்காணாதே
கேட்டார்     பலரும்    அறிதற்கரிதாய்    அறிவார்    சிலராதலின்
சில்செவிக்கண்ணதாகிய    யாழை    இப்பாண்சாதியது    உணவிற்கு
முதலாகப்பெற்ற     பரிசு     என்னென்று     வெறுத்து    இங்கே
என்செய்கின்றாயோ     பாண!      பூணைத்தாங்கி        அழகிய
பெருமையையுடைய        எழில்பெற்ற       செம்பொறிபொருந்திய
மார்பினையுடைய  மென்மையான்  மகளிர்க்குத் தாழ்ந்து வன்மையான்
வீரரை     அகப்படுக்கும்     பெருமைபொருந்திய     நெடுந்தகை,
ஈன்றணிமைபொருந்தி  அது  தீர்ந்த குழவிக்குச் சுரக்கும் முலைபோல
நீர்மிக்க   காவிரியினது   கரை   மரத்தைச்சாய்க்கும்  மிக்கவெள்ளம்
உலகத்து  உயிர்ப்பன்மையைப் பாதுகாக்கும் நல்லசோழநாட்டையுடைய
வேந்தன்,   உட்பகை  ஒரு  கூற்றிலே  பட்டதென்னும்படி  எம்மைப்
புட்செய்யும்   பகையிடத்து   ஏவானாகலான்   யாம்  எம்மிற்பொருது
மடியக்கடவேமென்று  நீங்காத மறத்தையுடையோர் தம்முடைய பூரித்த
தோள்களைத்தட்ட  அவருடைய மேற்கோள் தணிதற்குக் காரணமாகிய
பறையறையும்   அழகுபொருந்திய   தேர்வழிக்கண்  வெய்யகள்ளைப்
பருகுவார் தம் நடுங்கு கையான் உகுக்கப் பட்ட நறிய அச்சேற்றின்கண்
ஆடிய  பாகரேறாத  யானை  நெடிய நகரிடத்து ஒலிக்கும் பறையினது
ஓசையைச்  செவிதாழ்த்துக்கேட்கும் உறையூரிடத்தான்; அவ்விறைவன்,
நீ   பிறன்வாயிலை   நினையாமை  நினக்கு  அளிப்பன்,  அவன்பாற்
செல்வையாயின்-எ- று.

செம்பொறியென்றது,   ‘‘வரையகன்   மார்பிடை   வரையு   மூன்றுள’’
(சீவக. 1462) என்னும் இலக்கணத்தை; திருமகளெனினும் அமையும்.

உறந்தையோனென்பது வினைக்குறிப்புமுற்று.

பூண்சுமந்தெழிலிய அம்பகட்டாகத்து நெடுந்தகை