புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   378
Zoom In NormalZoom Out


தாமரையெனினும் அமையும்;அதற்கு இன் அல்வழிச் சாரியை. 

‘புகழ்த்தகையில்லோன்’ (5) என்பதூஉம் பாடம். 

ஒருநாள்     முதலன  பத்துநாழிகையும்  அறத்தின்வழியொழுகிப்பின்
பத்துநாழிகையும்   இறையின்   முறைமைகேட்டுச்செய்த  பொருளைப்
பரிசிலர்க்குக்     கொடுத்து     மகிழ்ந்திருத்தலால்    கடும்பகற்றேர்
வீசிருக்கையென்றார். 

(70) தேஎந் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண
கயத்துவாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோற் றகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்கிவட் டணிகெனக் கூறி
வினவ லானா முதுவா யிரவல
தைஇத் திங்கட் டண்கயம் போலக்
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்
அடுதீ யல்லது சுடுதீ யறியா
திருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்
கிள்ளி வளவ னல்லிசை யுள்ளி
நாற்ற நாட்டத் தறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பன் ஞாங்க ரூதும்
கைவள் ளீகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழு மோதி யொண்ணுதல்
இன்னகை விறலியொடு மென்மெல வியலிச்
செல்வை யாயிற் செல்வை யாகுவை
விறகொய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்
தலைப்பா டன்றவ னீகை
நினைக்க வேண்டா வாழ்கவன் றாளே. 

திணையும்  துறையும்   அவை.   (பாடாண்டிணை,   பாணாற்றுப்படை)
அவனைக் கோவூர்கிழார் பாடியது. 

(இ - ள்.) தேன்போல  இனிய   நரப்புத்தொடை   பொருந்திய சிறிய
யாழையுடைய  பாண!  ‘கயத்தின்கண்  வாழும் யாமையை நாராசத்தின்
கண்ணே   கோத்தாற்போன்ற   நுண்ணிய   கோலாற் பிணிக்கப்பட்ட
தெளிந்த  கண்ணையுடைய  பெரிய  உடுக்கையோசை  இனிய காண்க;
இவ்விடத்தே சிறிது ஆறிப்போவீராக’ என்றுசொல்லிப் பலவும் என்னை
வினவுதலமையாத     முதிய     வாய்மையையுடைய     இரவலனே!
யான்சொல்லுவதனைக்    கேட்பாயாக;   தைமாதத்தின்கட்   குளிர்ந்த
பொய்கையைப்     போலக்     கொள்ளக்கொள்ளத்    தொலையாத
சோற்றையுடைய     அகன்ற      நகரிடத்து      அடுநெருப்பல்லது
சுடுநெருப்பறியாது   சோற்றையும்  தண்ணீரையும்  விளைக்கும்  நல்ல
நாட்டுக்கு   வேந்தன்,   கிள்ளிவளவனது   நல்ல  புகழை  நினைத்து
மணத்தை   ஆராயும்   ஆராய்ச்சியையுடைய  வண்டுசிறிய  வெளிய
ஆம்பலின்மீதே    ஊதும்    கையான்வள்ளிய    கொடையையுடைய
பண்ணனது       சிறுகுடிக்கட்      பாதிரிநாறும்      மயிரினையும்
ஒள்ளியநுதலினையும் இனிய முறுவலையுமுடைய விறலியுடனே மெல்ல
மெல்ல    நடந்து    செல்வையாயின்    செல்வத்தையுடையையாவை;
விறகைக்காட்டினின்றும்  ஊரகத்துச்  செலுத்துமாந்தர்  அக்காட்டகத்து
விழுப்பொருள்   எடுத்துக்  கொண்டாற்  போல்வதொரு நேர்பாடன்று
அவனது வண்மை; அது பெறுவேங்கொ லென்று கருத