ஒலிக்கும் திரையையுடைய கடல்சூழ்ந்த இப்பயன் பொருந்திய உலகங்கள் கையகத்தே அகப்படுதல் பொய்யாகாது; ஆதலால், நல்லனபோலே யிருக்கவும் நியாயத்தையுடையனபோலே யிருக்கவும் பழையோரொழுகிய ஒழுக்கமுடையனபோலேயிருக்கவும் அன்புபொருந்திய நெஞ்சையுடைய நும் இடையே புகுந்து நும்மைப் பிரித்தற்கு அலமரும் அயலோருடைய சிறப்பில்லாத மொழியைக் கேளாது இன்று போல்க, நுமது கூட்டம்; வென்றுவென்று கொலைக்களத்தின்கண் மேம்படுக, நும்முடைய வேல்; வளைந்த வரியை யுடைய புலிவடிவாகச் செய்யப்பட்ட சேய்மைக்கண் விளங்குகின்ற தோண்டிய இலாஞ்சனையைப் பெரிய நீரின்கண் வாழும் கயலுடனே பொறித்த சிகரங்களையுடையவாக, பிறருடைய குன்றையுடைய நாடுகள்-எ-று. குன்றுகெழுநாடென்றதாயினும், கருதியது பிறர்நாட்டுக்குன்றுக ளென்றதாகக் கொள்க. கோளியென்றது, பூவாதுகாய்க்கும் மரம். தழீஇப் (5) பொறாவென (7) இயையும். முரசமூன்றாவன:-வீரமுரசும், நியாயமுரசும், தியாகமுரசும்; மணமுரசுடனே ஏனை இரண்டுமுரசென்பாரும் உளர். நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென முற்றாக உரைப்பாரும் உளர். தொடுபொறி : பெயர்மாத்திரையாய் நின்றது. ஒருவீர் ஒருவீர்க்கு உதவியாய் வலியையுடையீராய் நீங்கள் இருவீரு மென்பாரும் உளர். இருவரரசர் ஒருங்கிருந்தாரைப் பாடினமையின், இஃது உடனிலை ஆயிற்று.
(59) ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பிற்
றாடோய் தடக்கைத் தகைமாண் வழுதி
வல்லை மன்ற நீநயந் தளித்தல்
தேற்றாய் பெரும பொய்யே யென்றும்
காய்சினந் தவிராது கடலூர் பெழுதரும்
ஞாயி றனையைநின் பகைவர்க்குத்
திங்க ளனையை யெம்ம னோர்க்கே.
திணை - அது; துறை - பூவைநிலை. (பாடாண்டிணை) பாண்டியன் சித்திரமாடத்துத்துஞ்சிய நன்மாறனை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் பாடியது. (இ - ள்.) ஆரந்தாழ்ந்த அழகுமிக்க மார்பினையும் முழந்தாளிலே தோய்ந்த பெரிய கையினையுமுடைய அழகுமாட்சிமைப்பட்ட வழுதி! நீ யாவர்க்கும் உவந்து அருளைப் பண்ணுதலைத் தெளிவாக வல்லை! மெய்யாக யாவரிடத்தும் தெளியாய், பெரும! பொய்யை; எந்நாளும் சுடும் வெம்மை யொழியாது கடலிடத்தே கிளர்ந்தெழுகின்ற ஞாயிற்றை ஒப்பை, நின் பகைவர்க்கு; எம்போல்வார்க்குத் திங்களை ஒப்பை-எ-று. தேற்றாயென்றது, தேறாயெனத் தன்வினையாய் நின்றது; தேற்றாயென்பதற்குப் பொய்தெளிக்கப்படாயெனினும் அமையும். ஞாயிற்றோடும் திங்களோடும் உவமித்தமையால், இது பூவைநிலை ஆயிற்று.
(60) முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்
செம்மீ னிமைக்கு மாக விசும்பின்
உச்சி நின்ற வுவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையிற் சுரமுதல் சேர்ந்த
சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
தொழுதன மல்லமோ பலவே கானற்
கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும்
ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட் டன்ன வெங்கோன்
வலனிரங்கு முரசின் வாய்வாள் வளவன்
வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை யொக்குமா லெனவே.
திணை - அது; துறை - குடைமங்கலம். (பாடாண்டிணை) சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது. (இ - ள்.) கடல் நடுவே தோன்றுகின்ற திமிலின்கண் இடப்பட்ட விளக்குப்போலச் செவ்வாய்மீன் விளங்கும் மாகமாகிய விசும்பினது உச்சிக்கண்ணேநின்ற உவாநாளின் மதியத்தைக் கண்டு காட்டுள் வாழும் மயிலைப்போலச் சுரத்திடைப்பொருந்திய சிலவாகிய வளையையுடைய விறலியும் யானும் கடிதின் விரைந்து தொழுதேமல்லேமோ பலகால்? கடற்கரையிடத்துக் கழியினீரான் விளைந்த உப்பை முகந்து கொண்டு மலைநாட்டை நோக்கிச் செல்கின்ற ஆரையுடைய சகடையினது குழிப்பாய்தலைத் தீர்த்துச் செலுத்தும் வலியையுடைய
|