புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   380
Zoom In NormalZoom Out

வருதார் தாங்கி யமர்மிகல் யாவது
பொருதாண் டொழிந்த மைந்தர் புண்டொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்த றீட்டி
நிறங்கிள ருருவிற் பேஎய்ப் பெண்டிர்
எடுத்தெறி யனந்தற் பறைச்சீர் தூங்கப்
பருந்தருந் துற்ற தானையொடு செருமுனிந்
தறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாமாய்ந் தனரே குடைதுளங் கினவே
உரைசால் சிறப்பின் முரைசொழிந் தனவே
பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
இடங்கெட வீண்டிய வியன்கட் பாசறைக்
களங்கொளற் குரியோ ரின்றித் தெறுவர
உடன்வீழ்ந் தன்றா லமரே பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே
வாடாப் பூவி னிமையா நாட்டத்து
நாற்ற வுணவி னோரு மாற்ற
அரும்பெற லுலக நிறைய
விருந்துபெற் றனராற் பொலிகநும் புகழே.

திணை - தும்பை;   துறை -   தொகைநிலை.   சேரமான்   குடக்கோ
நெடுஞ்சேரலாதனும்   சோழன்வேற்பஃறடக்கைப்  பெருவிறற்கிள்ளியும்
போர்ப்புறத்துப்    பொருது    வீழ்ந்தாரைக் கழாத்தலையார் பாடியது.

(இ  - ள்.) வருகின்ற தூசிப்படையைத் தடுத்துப் போரின்கண் ஒருவர்
ஒருவரை    வெல்வேமென    மிகுதல்    எங்ஙனமாவது?   பொருது
அக்களத்தின்கட்பட்ட  வீரரதுபுண்ணைத்தோண்டி அவ்வுதிரந்தோய்ந்த
செய்ய  கையால் தமது மயிரைக் கோதி நிறமிக்க வடிவையுடைய பேய்
மகளிர்   மேன்மேலும்   கொட்டுகின்ற   மந்தமான  ஓசையையுடைய
பாறையினது  தாளத்தேயாடப்  பருந்து ஊனைத் தின்னப் பொருந்திய
படையானே  போரின்கண்  வெகுண்டு  அறத்தான்  அடர்த்துச்செய்த
வலிய    போரையுடைய    அரசர்    இருவரும்   பட்டார்;   அவர்
கொற்றக்குடையும்    தளர்ந்தன;   புகழமைந்த   தலைமையையுடைய
முரசுவீழ்ந்தன;    பல    நூறாக   அடுக்கப்பட்ட   பதினெண்பாடை
மாக்களாகிய   படைத்தொகுதி  இடமில்லையாம்படி  தொக்க  அகன்ற
இடத்தையுடைய பாடிவீட்டின்கட் போர்க்களம் தமதாக்கிக்கொள்ளுதற்கு
உரியோர் ஒருவரின்றிக் கண்டார்க்கு அச்சம்வர உடனே மடிந்ததுபூசல்;
அவர்    பெண்டிரும்,  பச்சையிலைதின்னாராய்க்   குளிர்ந்த   நீரின்
கண்  மூழ்காராய் அவர்  மார்பத்தைக்கூடி     அக்களத்தின்கண்ணே
உடன்கிடந்தார்;   வாடாத     கற்பகத்தின்    தாரினையும்இமையாத
கண்ணினையும்      நாற்றமாகிய      உணவையுமுடையதேவர்களும்
மிகப்பெறுதற்கரிய     உலகம்   நிரம்பவிருந்து   பெற்றார்; அதனாற்
பொலிக நுங்கள்புகழ்-எ - று.

அனந்தல்-பறைகொட்டுவார் கை புண்படுதலின், மந்தமாக ஒலித்தல்.

அறத்தின்    மண்டுதலாவது    படை   பட்டபின்பெயராது   சென்று
இருவேந்தரும் பொருதல்.

பட்ட    இருவேந்தரும் அக்களத்துக்  கிடக்கின்ற படியைக்கண்டு தம்
மனத்தோடு   நொந்து   அவரைநோக்கிக்   கூறுகின்றாராதலான், நும்
புகழென முன்னிலையாக்கிக் கூறினார்.

வேந்தர்     மாய்ந்தனர்; குடை துளங்கின; முரசு ஒழிந்தன; அமர்
உடன்வீழ்ந்தது;  பெண்டிரும்  மார்பகம்பொருந்தி அமைந்தனர்; நாற்ற
உணவினோரும்   விருந்துபெற்றனர்;   இவ்வாறான   பின்பும்   யாம்
அமரினை   மேற்கொண்டு   பொருது   வெல்வேமென்று  தாம்  தாம்
நினைந்த  நினைவு எவ்வண்ணமாவதென்று தம்நெஞ்சொடு கூறிப் பின்
பொலிக நும்புகழேயென அவ்வரசர் கிடந்தவாறு கண்டு கூறியவாறு.

மறத்தின் மண்டியவென்று பாடமோதுவாரும் உளர்.

வருதார்தாங்கி     அமர்மிகல் யாவதென்பதற்கு இவர்கள் செய்தபடி
கண்டு.......இனிச்  சிலர்  பொருது  வேறல்  எங்கேயுள்ளதென  வியந்து
கூறியதாக உரைப்பாரும் உளர்.

(63) எனைப்பல் யானையு மம்பொடு துளங்கி
விளைக்கும் வினையின்றிப் படையொழிந் தனவே
விறற்புகழ் மாண்ட புரவி யெல்லாம்
மறத்தகை மைந்தரொ டாண்டுப்பட் டனவே
தேர்தர வந்த சான்றோ ரெல்லாம்
தோல்கண் மறைப்ப வொருங்குமாய்ந் தனரே
விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம்
பொறுக்குந ரின்மையி னிருந்துவிளிந் தனவே|
சாந்தமை மார்பி னெடுவேல்