| முன்னாகக் கருதியெறிந்த புறத்துற்ற புண்ணுக்கு நாணி மறக்கூறுபாட்டையுடைய வேந்தன் வாளோடு வடக்கிருந்தான்; ஆதலால், இவ்விடத்து யாம் அவனையன்றித் தனித்து உயிர்வாழும் ஞாயிற்றையுடைய பகல் எமக்கு இனி முன்பு கழிந்த நாள் போலக் கழியா-எ - று. ‘மண்முழா மறப்ப’ என்பது முதலாகிய செயவெனெச்சங்களெல்லாம் வாள்வடக்கிருந்தனனென்னும் வினையோடு முடிந்தன. எறிந்தபுண்-எறிதல் ஏதுவாக உற்ற புண். ‘முன்புகுறித் தெறிந்த புறப்புண்ணாணி’ என்றது, மார்பில் தைத்துருவின புண்ணும் புறப்புண்ணாதலையொக்குமென நாணியென்றதாகக்கொள்க.
(66) நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் னாற்ற றோன்ற
வென்றோய் நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே.
திணை - வாகை; துறை - அரசவாகை. சோழன் கரிகாற்பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடியது. (இ - ள்.) நீர்செறிந்த பெரிய கடலின்கண்ணே மரக்கலத்தையோட்டிப் போர்செய்தற்குக் காற்றின்றி நாவாய் ஓடாதாக ஆண்டு வளிச்செல்வனையழைத்து ஏவல்கொண்ட வலியோன் மரபினுள்ளானே! மதம் பொருந்திய யானையையுடைய கரிகால்வளவ! மேற்சென்று போரை எதிர் நின்றுகொன்ற நினது வலிதோற்ற வென்றவனே! நின்னினும் நல்லனல்லவே? தழைத்தலைக்கொண்ட புதுவருவாயையுடைய வெண்ணியென்னும் ஊர்ப்புறத்துப் போர்க்களத்தின்கண் மிகப் புகழை உலகத்துப்பொருந்திப் புறப்புண்ணிற்கு நாணி வடக்கிருந்தோன், அவ்வாறிருத்தலான்-எ - று. புகழெய்தியென்றது புறப்புண்ணிற்கு நாணுதல்தன்னை. ஓட்டியென்பதனை ஓட்டவெனத் திரிக்க. எய்தி : எய்தவெனத் திரிப்பினும் அமையும்; எய்தவென்று பாடமோதுவாரும் உளர்.
(67) அன்னச் சேவ லன்னச் சேவல்
ஆடுகொள் வென்றி யடுபோ ரண்ணல்
நாடுதலை யளிக்கு மொண்முகம் போலக்
கோடுகூடு மதிய முகிழ்நிலா விளங்கும்
மையன் மாலையாங் கையறு பினையக்
குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை யாயி னிடையது
சோழநன் னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ
வாயில் விடாது கோயில் புக்கெம்
பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர்
ஆந்தை யடியுறை யெனினே மாண்டநின்
இன்புறு பேடை யணியத்தன்
நன்புறு நன்கல நல்குவ னினக்கே.
திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி.
கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
(இ - ள்.) அன்னச்சேவலே! அன்னச்சேவலே! கொல்லுதலைப் பொருந்திய வென்றியையுடைய அடுபோரண்ணல் தன்னாட்டைத் தலையளிசெய்யும் விளங்கிய முகம்போல இரண்டுபங்கும் வந்து பொருந்திய மதியம் அரும்புநிலாவிளங்கும் தமியோராயினார்க்கு மயக்கத்தைச்செய்யும் மாலைப்பொழுதின்கண் யாம்செயலற்று வருந்தக் குமரியாற்றினது பெரிய துறைக்கண்ணே அயிரையை மேய்ந்து வடதிசைக்கண் இமயமலைக் கண்ணே போகின்றாயாயின், இவ்விரண்டிற்கும் இடையதாகிய நல்ல சோழநாட்டின்கட் சென்று பொருந்தின், உறையூரின்கண் உயர்ந்த நிலையையுடைய மாடத்தின்கண்ணே நினது குறும்பறையோடு தங்கி வாயில்காவலர்க்கு உணர்த்திவிடாதே தடையின்றிக் கோயிற்கண்ணே புக்கு எம்முடைய பெருங்கோவாகிய கிள்ளி கேட்பப் பெரிய
|