| ஊர்களிற்பொய்யாத புதுவருவாயையுடைய மையலென்னும் ஊர்க்குத்தலைவனாகிய மாவனும், நிலைபெற்ற எயிலென்னும் ஊரையுடைய ஆந்தையும், புகழமைந்த அந்துவஞ்சாத்தனும், ஆதனழிசியும், வெய்யசினத்தையுடைய இயக்கனுமென இவருட்படப் பிறரும் எனது கண்போலும் நண்பினையுடைய நட்டாரோடு கூடிய இனிய செருக்கையுடைய மகிழ்நகையைத் தப்பியவனாகிப் பலவுயிரையும் பாதுகாக்கும் அரசர்குலத்திற் சிறந்த பாண்டிநாடு காக்கும் காவலின் நீங்கிப் பிறருடைய வன்புலங்களைக் காக்கும் காவற்கண்ணே இக்குடிப்பிறப்பின் நீங்கி யான் பிறப்பேனாகுக-எ - று. ‘மெலிகோல் செய்தேனாகுக’ என்பதனுள் ஆகுகவென்பது எங்கும் தந்துரைக்கப்பட்டது. ஒன்றோவென்பது எண்ணின்கண்வருவதோரிடைச்சொல்; அதனை முன்னும் பின்னுங் கூட்டுக. (72) நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் இளைய னிவனென வுளையக் கூறிப் படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையுந் தேரு மாவும் படையமை மறவரு முடையம் யாமென் றுறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ டொருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலே னாகுக ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் றலைவ னாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகவென் னிலவரை புரப்போர் புன்கண் கூர இரப்போர்க் கீயா வின்மையா னுறவே. திணையும் துறையும் அவை. (காஞ்சி, வஞ்சினக் காஞ்சி) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாட்டு. (இ - ள்.) நம்மாற் சிரிக்கத்தக்கார் இவன் ஆளும் நாட்டை மிகுத்துச் சொல்லுவாரெனவும் இவன்றான் இளையனெனவும் யான் வெறுப்பச் சொல்லி ஒலிக்குமணி இருமருங்கும் ஒன்றோடொன்று மாறியிசைக்கும் பரந்த அடியினையும் பெரிய காலினையுமுடைய உயர்ந்த நல்ல யானை |