| திரப்பாராயின், அவர்க்குச் சீர்மையையுடைய முரசு பொருந்திய பழையதாய்வருகின்ற உரிமையையுடைய எனது அரசாட்சி கொடுத்தலோ எளியது; இனிய உயிரேயாயினும் கொடுப்பேன், இந்நிலத்தின்கண்; அமைச்சர் படைத்தலைவர்முதலாகிய வலியையுடையோரது வலியைப் பாதுகாவாது என்னுள்ளத்தை இகழ்ந்த அறிவில்லாதோன் யாவர்க்கும் விளங்கத் துயில்கின்ற புலியை இடறின குருடன் போலப் பிழைத்துபோதலோ அரிது; மூங்கிலைத் தின்னும் வலியையுடைய யானையினது காலின்கண் அகப்பட்ட வலிய திண்ணிய மூங்கிலது நீண்ட முளையையொப்ப மேற்சென்று அவ்விடத்துவருந்தும்படி பொருதிலேனாயின், கூடிய தீதில்லாத நெஞ்சத்தாற் காதல் கொள்ளாத பலவகைப்பட்ட கரிய கூந்தலையுடைய பொதுப்பெண்டிரது பொருந்தாத புணர்ச்சியிடை என் மாலை துவள்வதாக-எ - று. ‘இரக்குவிராயின்’ என்றுபாட மோதுவாரும் உளர். தீதில்காதல்கொள்ளாவென இயைப்பினும் அமையும். உள்ளமென்றது உள்ளத்தாற் சூழும் சூழ்ச்சியை. தன்மேம்பாடு கூறுகின்ற இடமாதலின், நல்லடியென்பது தற்புகழ்தலென்னும் குற்றமாகாது. (74) குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளிற் றப்பார் தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணு மளவை ஈன்ம ரோவிவ் வுலகத் தானே. திணை - பொதுவியல்; துறை - முதுமொழிக்காஞ்சி. சேரமான் கணைக்காலிரும்பொறை சோழன்செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயிற்கோட்டத்துச் சிறையிற்கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப்பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு. (இ - ள்.) பிள்ளை இறந்துபிறப்பினும் தசைத்தடியாகிய மணை பிறப்பினும் அவற்றையும் ஆளல்லவென்று கருதாது வாளோக்குதலில் தவறார் அரசராயிருக்க, பகைவர் வாளாற் படாது, சங்கிலியாற் பிணிக்கப்பட்ட நாய்போலப் பிணித்துத் துன்பத்தைச் செய்து இருத்திய கேளல்லாத கேளிருடைய உபகாரத்தான்வந்த தண்ணீரை இரந்துண்ணக் கடவே மல்லேமென்னும்மன வலியின்றி வயிற்றின்கட் டீயையாற்ற வேண்டித் |