கையது போர்-எ - று. நெடுந்தகைபோர், பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றின்கட் சாறுதலைக் கொண்டெனப் பெண் ஈற்றுற்றென இழிசினன்கையதாகிய ஊசியின் விரைந்தன்றெனக் கூட்டுக. சாறுதலைக்கொண்டென அதற்கு உதவப்போகவும், பெண் ஈற்றுற்றென அதற்கு உதவப்போகவுமென வேறுவேறு கொள்க; ஒன்றாக உரைப்பாரும் உளர். (83) அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென் தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே அடுதோண் முயங்க லவைநா ணுவலே என்போற் பெருவிதுப் புறுக வென்றும்
ஒருபாற் படாஅ தாகி
இருபாற் பட்டவிம் மைய லூரே. திணை - கைக்கிளை; துறை - பழிச்சுதல். அவனைப் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது. (இ - ள்.) அடியின்கட் புனைந்த செறிந்த வீரக்கழலினையும் மைபோன்ற தாடியினையுமுடைய இளையோன்பொருட்டு எனது வளை என்னைக் கைவிடுதலான்,யான் யாயை அஞ்சுவேன்; அவன்பகையைக் கொல்லுந் தோளைத் தழுவுதற்கு அவையின்கண்ணுள்ளாரை நாணுவேன்; என்னைப்போல மிக்க நடுக்கமுறுவதாக, எந்நாளும், யாயேயாதல் அவையேயாதல் ஒருகூற்றிற் படாதாகியாயும் அவையுமாகிய இரு கூற்றிற்பட்ட இம்மயக்கத்தையுடைய ஊர்-எ - று. மையலூர் பெருவிதுப்புறுகவெனக் கூட்டுக. யாயில்லையாயின், வளை கழலுதற்கு அஞ்சவேண்டா; அவையில்லையாயின், முயங்குதற்கு அஞ்சவேண்டாவென்பது கருத்தாகக் கொள்க. ‘ஒருபாற் படாஅ
தாகி யிருபாற் பட்டவிம் மையலூர்’ என்பதற்கு
அச்சமும் நாணு முண்டாய்வருந்தும் என்கூற்றிலும் நில்லாது என்காதலறிந்து அவனோடு கூட்ட நினையாத யாய்கூற்றிலும் நில்லாது இருவர் கூற்றிலும் நின்று மயங்குகின்ற ஊரெனினும் அமையும். (84)
என்னை, புற்கை யுண்டும் பொருந்தோ ளன்னே
யாமே, புறஞ்சிறை யிருந்தும் பொன்னன் னம்மே
போரெதிர்ந் தென்னை போர்க்களம் புகினே
கல்லென் பேரூர் விழவுடை யாங்கண்
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்
குமணர் வெரூஉந் துறையன் னன்னே. திணையும் துறையும் அவை. (கைக்கிளை, பழிச்சுதல்) அவனை அவர் பாடியது. (இ - ள்.) என்னுடைய தலைவன், தன்நாடிழந்த வறுமையாற்புற்கை நுகர்ந்தானாயினும் பகைவர் அஞ்சத்தக்க பெரியதோளையுடையன்; யாம், அவனுடைய சிறைப்புறத்திருந்தும் பலகாலுங் காணப்பெறினும் மெய்யுறப்பெறாமையின் வருந்திப் பொன்போலும் நிறத்தையுடையே
|