| தாமே இரந்துண்ணும் அளவினையுடையாரை அவ்வரசர்பெறுவார்களோ இவ்வுலகத்தின்கண்-எ - று. அளவையுடையாரை அளவையென்றார். இதன் கருத்து: சாக்குழவியும் ஊன்பிண்டமுமென இவற்றின் மாத்திரையும் பெற்றிலேமெனப் பிறர்மேல்வைத்துக் கூறியவாறு. கேளல்கேளிரென்றது சிறைக்கோட்டங் காவலரை. அன்றி, இவன் ஆண்மையுடையனல்லனென்று வாளாற் கொல்லாராய்த் தொடர்ப்படுஞமலிபோல இடர்ப்படுத்திருத்திய கேளல்கேளிர் வேளாண் சிறுபதத்தை மதுகையின்றி வயிற்றுத்தீத் தணிக்கவேண்டித்தாம் இரந்துண்ணுமளவாகக் குழவி செத்துப்பிறப்பினும் ஊன்தடிபிறப்பினும் இவ்வுலகத்து மகப்பெறுவாருளரோவென உரைப்பினும் அமையும். அரசர்க்கு மானத்தின்மிக்க அறனும் பொருளும் இன்பமுமில்லையென்று கூறினமையின், இது முதுமொழிக்காஞ்சியாயிற்று. (75) மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப் பாறர வந்த பழவிறற் றாயம் எய்தின மாயி னெய்தினஞ் சிறப்பெனக் குடிபுர விரக்குங் கூரி லாண்மைச் சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே மண்டமர்ப் பரிக்கு மதனுடை நோன்றாள் விழுமியோன் பெறுகுவ னாயி னாழ்நீர் அறுகய மருங்கிற் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் நொய்தா லம்ம தானே மையற்று விசும்புற வோங்கிய வெண்குடை முரசுகெழு வேந்த ரரசுகெழு திருவே. திணை - பொதுவியல் துறை - பொருண்மொழிக்காஞ்சி சோழன் நலங்கிள்ளி பாட்டு. (இ - ள்.) தம் குடியின் முதியோரை முதியோரைக் கூற்றம் கொண்டு போயிற்றாக, விதிதரப்பட்டுத் தம்பால்வந்த பழையவெற்றியால் உண்டாகிய அரசுரிமையைப் பெற்றேமானால் இத்தலைமையைப் பெற்றேமெனக்கொண்டு தம் குடிமக்களை இறைவேண்டியிரக்கும், மிகுதியில்லாத ஆண்மையையுடைய உள்ளஞ்சிறியோன் பெறின், அத்தாயம் அவனுக்குப் பரிக்கவொண்ணாதாம்படி கனத்தது, மிகவும்; அடுத்துப்பொரும் போரைப் பொறுக்கும் மனவெழுச்சியை யுடைத்தாகிய வலிய முயற்சியையுடைய சீரியோன் பெறுவனாயின், தாழ்ந்த நீரையுடைய வற்றிய கயத்திடத்துச் சிறிய தண்டாகிய வெளிய கிடேச்சினதுகோடைக்கண் உலர்ந்த சுள்ளியைப்போலப் பெரிதும் நொய்து, குற்றமற்று விண்ணின் கண்ணே பொருந்த உயர்ந்த வெண்குடையினையும் முரசினையுமுடைய அரசரது அரசாட்சியைப் பொருந்திய செல்வம்-எ - று. குடிபுரவிரக்குமென்பது, |