கொதித்தெழுமாயின்? பாரத்து மிகுதியாற் பார் அச்சுமரத்தோடு வந்துதாக்கி உற இருத்தலின் நிலத்தின்கட் குளித்த பண்டத்தையுடைய சகடத்தினது ஆழ்ச்சியைப் போக்குதற்குப் புனல் கொழிக்கப்பட்ட மணற்பரக்கவும் கற்பிளக்கவும் நடக்கவல்ல மிக்க மனச்செருக்கினையுடைய கடாவிற்குப் போதற்கரிய துறையுமுண்டோ? இல்லையன்றே; அவைபோல, கணையமரத்தையொக்கும் முழந்தாளிலே பொருந்திய பெரியகையாகிய தப்பாத வன்மையைச் செய்யும் கையினையுடைய வீரர்க்குத்தலைவ! பெரிய நிலத்தின்கண் நினது மண்ணைக்கொண்டு ஆர்க்கும் வீரரும் உளரோ? இல்லையன்றே, நீ போர்க்களத்திற் புகின்-எ - று. மழவர்பெரும! நீ களம்புகின் பொருநரும் உளரோ? இல்லை யன்றேயெனக் கூட்டி வினை முடிவு செய்க. தடக்கையையுடைய பெருமவெனக் கூட்டி, வன்கையை மழவரொடு கூட்டியுரைப்பினும் அமையும். இருநிலமாகிய மண்ணென்பாரும் உளர். ‘மதப்பகடு’ என்பதூஉம் பாடம்.
(91) வலம்படு வாய்வா ளேந்தி யொன்னார்
களம்படக் கடந்த கழறொடித் தடக்கை
ஆர்கலி நறவி னதியர் கோமான்
போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி
பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
தாத னின்னகத் தடக்கிச்
சாத னீங்க வெமக்கீத் தனையே.
திணை - பாடாண்டிணை; துறை -வாழ்த்தியல். அவனை அவர் நெல்லிப்பழம்பெற்றுப் பாடியது. (இ-ள்.) வென்றியுண்டான தப்பாத வாளையெடுத்துப் பகைவர் களத்தின்கட்பட வென்ற கழல இடப்பட்ட வீரவளை பொருந்திய பெரிய கையினையுடைய மிக்க ஆரவாரத்தைச் செய்யும் மதுவினையுடைய அதியர்கோமான்! மாற்றாரைப் போரின்கட்கொல்லும் வீரச்செல்வத்தினையும் பொன்னாற் செய்யப்பட்ட மாலையையுமுடைய அஞ்சி! நீ, பால்போலும் பிறை நுதல்போலப் பொலிந்த திருமுடியினையும் நீலமணிபோலும் கரிய திருமிடற்றினையுமுடைய ஒருவனைப்போல நிலைபெறுவாயாக; பெரும! நீ, பழைய நிலைமையையுடைய பெரியமலையிடத்துவிடரின்கண் அரிய உச்சிக்கட்கொள்ளப்பட்ட சிறிய இலையினையுடைய நெல்லியின் இனிய பழத்தைப் பெறுதற்கரி தென்று கருதாது அதனாற் பெறும் பெரும்பேற்றினை எமக்குக்கூறாது நின்னுள்ளே அடக்கிச் சாதல் ஒழிய எமக்கு அளித்தாயாதலால்
|