படையைப் பொறுத்தற்கும் மாட்டாராய்ச் சிதறிக் கெட்டுப்போகலிலே மருவிய பெருமையில்லாத அரசரது நோயின்பக்கத்தான் இறந்த உடம்பை யணைத்துத் தமது ஆசைத்தன்மையை மறந்து அவர் வாளாற்படாத குற்றம் அவரிடத்தினின்றும் நீக்கவேண்டி அறத்தை விரும்பிய கோட்பாட்டையுடைய நான்குவேதத்தையுமுடைய அந்தணர் நல்ல கூற்றிலே பொருந்திய பசிய தருப்பைப்புல்லைப் பரப்பினராய்க் கிடத்தித் தமது ஆண்மையே பற்றுக்கோடாக நல்ல பூசலிலே பட்ட மேம்பட்ட வீரக் கழலினையுடைய வேந்தர் செல்லும் உலகத்திலே செல்கவென்று வாளோக்கியடக்கும் இழிதகவும் பிழைத்தார்கள், வரியையுடைய தேனீ ஒலிக்கும் வாயின்கண்வந்து புகுகின்ற மதத்தினையுடைய தலைமை பொருந்திய யானை போர்க்களத்தின்கண்ணே படப் பொறுத்தற்கரிய பூசற்கண்ணே சிதற வெட்டி, பெரிய தகைமையையுடையாய்! நீ சீரிய புண்பட்டபடியால்-எ - று. பெருந்தகாய்! நீ அருஞ்சமம் ததையநூறி விழுப்புண்பட்டவாற்றால் நின்னோடு எதிர்த்து வந்தோர்தாம் பீடின்மன்னர் விளிந்த யாக்கை தழீஇ நீள்கழன்மன்னர் செல்வுழிச்செல்கென வாள்போழ்ந்தடக்கலும் உய்ந்தனராதலின், இனி நின்னோடு எதிர்ப்பார் இன்மையின், முரசு முழங்கச் சென்று அமர்கடத்தல் யாவதெனக் கூட்டுக. சென்றமர்கடத்தல் யாவதென்றதனானும் வாள்போழ்ந்தடக்கலும் உய்ந்தனரென்றதனானும் வந்தோர் பட்டமை விளங்கும். இன்னும் இதற்கு நின் வாளாற் பட்டுத் துறக்கம் பெற்றதேயன்றி வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனராகலின், அவர்க்குப் பிறர்மேற் சென்று அமர்கடத்தல் என்ன பயனுடைத்தென்றுரைப்பினும் அமையும். இனி, வந்தோராகிய மன்னர் நீ விழுப்புண்பட்டபடியாலே வாள் போழ்ந்தடக்கலும் உய்ந்தார்; இனி நின்னோடு எதிர்ப்பாரின்மையின் மேற்சென்று அமர்கடத்தல் யாவதெனக்கூட்டி அதற்கேற்ப உரைப்பாரும் உளர். தார்தாங்கலுமென்ற உம்மை இழிவுசிறப்பு. வாள்போழ்ந்தடக்கலுமென்பது, நினக்குத் தொலைந்தாரென்னும் இழிதகவேயன்றித் தமர் வாள்போழ்ந்தடக்கும் இழிவையும் உய்ந்தனரென எச்சவும்மையாய் நின்றது.
(94)
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும வெமக்கே மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெருமநின் னொன்னா தோர்க்கே.
|