படப்பையவ ரகன்றலை நாடே. திணை - வாகை; துறை - அரசவாகை; திணை - வஞ்சியும், துறை கொற்றவள்ளையுமாம். அவனை அவர் பாடியது. (இ-ள்.) போர்முனைக்கட்பகைவரது மாறுபாடு அடங்கப்பொருதலால் தேய்ந்து குறைந்த நுனையுடைத்தாகிய கோட்டையுடைய நினது இனமாகிய யானை போகக்கண்ட பகைவர் தமது மதில்வாயிற் கதவங்களும் கணையமரங்களும் புதியனவாக இடுதற்குப் பழையன போக்கவும், பட்டோரது பிணம் உருவழியப் போர்க்களத்தை உழக்கிச் செல்லுதலால் வருந்திய குருதிக்கறைபொருந்திய குளம்பையுடைய நினது இனமாகிய நல்ல குதிரை போகக்கண்ட அப்பகைவர்தாம் கவைத்தவேலமுள்ளாற் காட்டுவாயில்களை அடைப்பவும், நின் பகைவரது மார்பின்கண் எறிந்த வழி ஆண்டுத்தைத்து நில்லாது உருவிப்போன உறையின்கட் செறித்தலில்லாத நின்வேலைக்கண்ட பகைவர் தமது கிடுகைக் காம்புடனே கைந்நீட்டுச் செறிக்கவும், வாள்வாய்க்கத் தைத்த வடுப்பரந்த நின்னுடைய மறத்தையுடைய வீரரது வலியைக்கண்ட அப்பகைவர் புண்பட்ட குருதியையுடைய அம்பைத் தூணியகத்து அடக்கிக் கொள்ளவும், நீதான் வெண் சிறுகடுகைக் காவலாகப் புகைப்பவும் தரியாது விரைய வந்து பொருந்துதன் முறைமையையுடைய இயல்பிற் புறத்தே நின்று உயிரைக் கொடுபோதும் கூற்றத்தையொப்பை; ஆதலாற் பகைவர் இரங்கக் கெடுவது கொல்லோ! வரம்பைச்சேர்ந்து வளையும் நெற்கதிர் சுழலும் கழனியொடு மிக்க நீர்ப்பக்கத்தையுடைய அவரது அகன்ற இடத்தையுடைய நாடு-எ - று. செல்லவுமென்பது முதலாய செயவெனெச்சங்கள் கூற்றத்தனையை யென்னும் வினைக்குறிப்பொடு முடிந்தன. நீ கூற்றத்தனையையாகலிற் போற்றார்நாடு அவரிரங்க விளிவது கொல்லெனக்கூட்டுக. கொல்லும் ஓவும் அசைநிலை.
(99) அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும்
அரும்பெறன் மரபிற் கரும்பிவட் டந்தும்
நீரக விருக்கை யாழி சூட்டிய
தொன்னிலை மரபினின் முன்னோர் போல
ஈகையங் கழற்கா லிரும்பனம் புடையற்
பூவார் காவிற் புனிற்றுப்புலா னெடுவேல்
எழுபொறி நாட்டத் தெழாஅத் தாயம்
வழுவின் றெய்தியு மமையாய் செருவேட்
டிமிழ்குரன் முரசி னெழுவரொடு முரணிச்
சென்றமர் கடந்துநின் னாற்ற றோற்றிய
அன்றும் பாடுநர்க் கரியை யின்றும்
பரணன் பாடினன் மற்கொன் மற்றுநீ
|