காணாவூங்கு யாவிராயினும் பொருதுமென்றல் ஓம்புமினெனக் கூட்டுக. (89) இழையணிப் பொலிந்த வேந்துகோட் டல்குல் மடவர லுண்கண் வாணுதல் விறலி பொருநரு முளரோநும் மகன்றலை நாட்டென வினவ லானாப் பொருபடை வேந்தே எறிகோ லஞ்சா வரவி னன்ன சிறுவன் மள்ளரு முளரே யதாஅன்று பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை வளிபொரு தெண்கண் கேட்பின் அதுபோ ரென்னு மென்னையு முளனே. திணையும் துறையும் அவை. (தும்பை, தானைமரம்) அவனை அவர் பாடியது. (இ-ள்.) மணிக்கோவையாகிய அணியாற் பொலிந்த ஏந்திய பக்கத்தினையுடைய அல்குலினையும் மடப்பத்தினையும் மையுண்ட கண்ணினையும் ஒளிதங்கிய நுதலினையுமுடைய விறலி! என்னோடு பொருவாருமுளரோ நும்முடைய பெரிய இடத்தினையுடைய நாட்டின் கண்ணென என்னைக் கேட்டலமையாத செருச்செய்யுந் தானையையுடைய வேந்தே! நீ போர்செய்யக் கருதுவையாயின், எம்முடைய நாட்டின்கண்ணே அடிக்குங் கோலுக்கு அஞ்சாது எதிர்மண்டும் பாம்புபோன்ற இளைய வலியவீரருமுளர்: அதுவேயன்றி, மன்றின்கண் தூங்கும் பிணிப்புற்ற முழவினது காற்றெறிந்த தெளிந்த ஓசையையுடைய கண்ணின்கண் ஒலியைக்கேட்பின், அது போர்ப்பறையென்று மகிழும் என்னுடைய தலைவனும் உளன்-எ - று. ‘தெண்கண்’ என்றது அதன்கண் ஓசையை. போரென்றது போர்ப்பறையை. (90) உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் அடைமல்கு குளவியொடு கமழுஞ் சாரல் மறப்புலி யுடலின் மான்கண முளவோ மருளின விசும்பின் மாதிரத் தீண்டிய இருளு முண்டோ ஞாயிறு சினவின் அச்சொடு தாக்கிப் பாருற் றியங்கிய பண்டச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய வரிமணன் ஞெமரக் கற்பக நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ எழுமரங் கடுக்குந் தாடோய் தடக்கை வழுவில் வன்கை மழவர் பெரும இருநில மண்கொண்டு சிலைக்கும் பொருநரு முளரோ நீகளம் புகினே. திணையும் துறையும் அவை. (தும்பை, தானை மறம்) அவனை அவர் பாடியது. (இ-ள்.) முறிந்த வளையை ஒப்ப மலர்ந்த வெண்காந்தட்பூ இலை தழைத்த குளவியுடனே நாறும் மலைச்சாரற்கண் மறத்தையுடைய புலி சீறின் எதிர்நிற்க வல்ல மானினமும் உளவோ? மயங்கிய ஆகாயத்திடத்தும் திசையின் கண்ணும் செறிந்த இருளும் உண்டோ ஞாயிறு |