தூங்கும்பரிசு தூக்கி இடுவோரின்மையின் ஏலாது கவிழ்ந்த என்மண்டையை இட்டு மலர்த்தவல்லார் யாரெனச் சொல்லிச் சுரத்திடத்தேயிருந்த சிலவாகிய வளையையுடைய விறலி! நீ அவன்பாற்போவையாயின் அவன் சேய்மைக் கண்ணானல்லன்; முனைப்புலத்தைச் சுடுதலான் எழுந்த இருட்சியையுடைய கரிய புகை மலையைச்சூழும் முகில்போல இளங்களிற்றைச் சூழும் பகைவர்தேயத்திருந்தான், பல வேற்படையையுடைய அதியமான்; ஒருபொழுதும் ஓயாமல் உண்ணவும் தின்னவும் படுதலான் ஈரம் புலராத மண்டை மெழுகான் இயன்ற மெல்லிய அடைபோலக் கொழுத்த நிணம் மிக உலகம் வறுமையுறுதலையுடைய காலமாயினும் பாதுகாத்தலை வல்லன்; அவன்றாள் வாழ்க-எ - று. பதலையென்பது ஒருதலைமுகமுடையதொரு தோற்கருவி. பகைப்புலத்தோனென்ற கருத்து : 2பகைவர்பால் திறைகொண்ட பொருளுடையனாதலின், நீ வேண்டியவெல்லாந் தருதல் அவனுக்கு எளி தென்பதாம். உம்மை : சிறப்பு. சேணோனல்லனென்பதற்குப் பரிசில் நீட்டிப்பானல்லனென்று உரைப்பினும் அமையும். (104) போற்றுமின் மறவீர் சாற்றுது நும்மை ஊர்க்குறு மாக்க ளாடக் கலங்கும் தாட்படு சின்னீர்க் களிறட்டு வீழ்க்கும் ஈர்ப்புடைக் கராஅத் தன்ன வென்னை நுண்பல் கரும நினையா திளையனென் றிகழிற் பெறலரி தாடே. திணை - வாகை; துறை - அரசவாகை. அவனை அவர் பாடியது. (இ-ள்.) நீங்கள் பாதுகாமின், மறவீர்! நுமக்கு நாங்கள் அறிவிப்பேம்; ஊரின்கண் இளம்புதல்வர் ஆடக் கலங்குகின்ற காலளவான அளவிற்பட்ட நீருள்ளே யானையைக் கொன்றுவீழ்க்கும் இழுத்தலையுடைய முதலையை யொக்கும் என் இறைவனது நுண்ணிய பல கருமத்தையும் நினையாதே அவனை இளையனென்று மதியாதிருப்பின் நுங்களுக்கு வென்றிபெறுதல் அரிது-எ - று. மறவீர்! நுமக்குச் சாற்றுதும்; என்னை இளையனென்று இகழின் வென்றிபெறுதல் அரிது; ஆதலால், நீர் போற்றுமினெனக் கூட்டுக. மீப்புடையென்றோதி, மிகுதியையுடையவென்று உரைப்பினும் அமையும். (105) சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப் பெய்யினும் பெய்யா தாயினு மருவி கொள்ளுழு வியன்புலத் துழைகா லாக மால்புடை நெடுவரைக் கோடுதோ றிழிதரும் நீரினு மினிய சாயற் பாரி வேள்பாற் பாடினை செலினே. திணை - பாடாண்டிணை; துறை - விறலியாற்றுப்படை. வேள்பாரியைக் கபிலர் பாடியது. (இ-ள்.) சிவந்த அணியைப்பெறுகுவை, ஒளிதங்கிய நுதலினையுடைய விறலி! பெரிய இடத்தையுடைய சுனையின்கண் தழைத்த கரிய இதழையுடைய நீலத்தினது வண்டுமொய்க்கும் புதியமலரின்கட்குளிர்ந்த |