புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   406
Zoom In NormalZoom Out


வேங்கையின்மிசைத்     தவழும்    பறம்பெனவே,    இவையொழிய
மரமின்மையும், பகைவர்சுடும் புகையின்மையும் கூறியவாறாயிற்று,

(109) அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொண் முரசின் மூவிரு முற்றினும்
உழவ ருழாதன நான்குபய னுடைத்தே

ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே

இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே

மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே

நான்கே அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து

திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே

வான்க ணற்றவன் மலையே வானத்து

மீன்க ணற்றதன் சுனையே யாங்கு

மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்

புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும்

தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன்

யானறி குவனது கொள்ளு மாறே

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி

விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர

ஆடினிர் பாடினிர் செலினே

நாடுங் குன்று மொருங்கீ யும்மே.

திணை - நொச்சி; துறை - மகண்மறுத்தல்.

அவனை அவர் பாடியது.

(இ-ள்.)   இரங்கத்தக்கது,   பாரியுடைய    பறம்பு,   பெருமையைக்
கொண்ட  முரசினையுடைய  நீயிர்  மூவேந்தரும் சூழினும்; உழவரால்
உழுது  விளைக்கப்படாதன  நான்குவிளையுளையுடைத்து;  அவற்றுள்,
முதலாவது,  சிறிய  இலையையுடைய  மூங்கிலினது  நெல்  விளையும்;
இரண்டாவது,  இனிய  சுளையையுடைய  பலாவினது பழம் ஊழ்க்கும்;
மூன்றாவது,     கொழுவிய     கொடியையுடைய    வள்ளிக்கிழங்கு
தாழவிருக்கும்;  நான்காவது,  அழகிய  நிறத்தையுடைய ஓரிபாய்தலான்
அதன்மேற்  பவரழிந்து  கனத்த  நெடிய  மலை  தேனைப்பொழியும்;
அகலநீள   உயரத்தால்   வானிடத்தையொக்கும்,   அவனது  மலை;
அவ்வானத்தின்கண்    மீனையொக்கும்,   அம்மலையின்கட்   சுனை;
அவ்விடத்து  மரந்தோறும்  கட்டப்பட்ட  யானையை யுடையீராயினும்
இடந்தோறும் பரப்பப்பட்ட தேரையுடையீராயினும் உங்கள் முயற்சியாற்
கொள்ளமாட்டீர்; நுமது வாள்வலியால் அவன்தாரான்; யான் அறிவேன்,
அதனைக் கொள்ளும்பரிசை; வடித்து முறுக்கப்பட்ட நரம்பினையுடைய
சிறிய   யாழைப்  பண்ணி  வாசித்து  நறுநாற்றத்தையுடைய  தழைத்த
கூந்தலையுடைய  நும்  விறலியர்  பின்வர ஆடினிராய்ப் பாடினிராய்ச்
செல்லின் அவன் நுமக்கு  நாட்டையும்  மலையையும்  கூடத்தருவன்-
எ-று.

அளிதோவென்பது ஈண்டு வியப்பின்கண் வந்தது.

ஓரியென்பது       தேன்முதிர்ந்தாற்       பரக்கும்      நீலநிறம்;
முசுக்கலையெனினும் அமையும்.

குன்றம்    தேன்சொரியுமென    இடத்துநிகழ்பொருளின்    தொழில்
இடத்துமேல் ஏறிநின்றது.

நான்குபயனுடைத்தென்று   வைத்து,  நெல் விளையும் பழம் ஊழ்க்கும்
கிழங்கு  வீழ்க்கும் தேன் சொரியுமென்று அவற்றின்  செய்கைதோன்றக்
கூறினாரெனினும்,  கருதியது  நெல்லும்  பழனும் கிழங்கும் தேனுமாகக்
கொள்க.