ரியவேலினையுமுடைய பாரியது பெறுதற்கருமையை அறியாராய்ப் போரேற்றுவந்த வென்றிப் பட்ட சேனையையுடைய அரசரது பொன்னாற் செய்யப்பட்ட கலமுதலியவற்றையுடைய
மனஞ்செருக்கிய குதிரையை எண்ணுவார்-
எ-று. வியன்மலையென்றது அரைமலையை. நெடுவரையென்றது உச்சிமலையை. இன்னகைமகளிர், நெடுவரையேறி முன்பு வேந்தர்கலிமாவை எண்ணுவோர், இப்பொழுது ஈத்திலைக்குப்பையேறி உமணர் உப்பொய் ஒழுகையை எண்ணுவர்; இதற்கு நோவேன் யான் ; எனது வாழ்நாள் கெடுவதாகவென வினைமுடிவு செய்க. அற்றேயென்னும் ஏகாரம் அசைநிலை. வியன்மலை அத்தன்மைத்தெனப் பிறிதொரு தொடராக்கி உரைப்பினும் அமையும்.
(117) மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்
தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்
வயலக நிறையப் புதற்பூ மலர
மனைத்தலை மகவை யீன்ற வமர்க்கண்
ஆமா நெடுநிரை நன்பு லாரக்
கோஒல் செம்மையிற் சான்றோர் பல்கிப்
பெயல்பிழைப் பறியாப் புன்புலத் ததுவே
பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய்தொடி யரிவையர் தந்தை நாடே.
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை.) அவனை அவர் பாடியது. (இ-ள்.) சனிமீன் புகைகளோடு கூடிப் புகையினும் எல்லாத் திசையினும் புகை தோன்றினும் தென்றிசைக்கண்ணே வெள்ளி போக்குறினும் வயலிடம் விளைவுமிகப் புதலிடத்துப் பூ மலர மனையிடத்துக் குழவியையீன்ற மேவிய கண்ணையுடைய ஆமாவினது நெடியநிரை நல்ல புல்லைமேயக் கோல் செவ்விதாகலின் அமைந்தோர் பலராக மழை பிழைப் பறியாத புல்லிய நிலத்தின் கண்ணது, இளைய வெருகினது கூரிய பல்லை யொப்பப் பசிய இலையையுடைய முல்லை முகைக்கும் நுண்ணிய தொழிலை யுடைய வளையினையணிந்த மகளிருடைய தந்தை நாடு-எ - று. பல்கியென்பதனைப் பல்கவெனத் திரிக்க. அரிவையர்தந்தை நாடு, பெயல் பிழைப்பறியாப் புன்புலத்ததுவெனக் கூட்டுக. என்றதனாற் போந்தது: புன்புலத்ததாயிருந்ததே! அது பெயல் பிழைப்பறியாமை, கோல்செம்மையினான் உளதாயதன்றே; அவ்வாறு கோல் செவ்விதாக நிறுத்தியவனை இழப்பதேயென்று அவன் நாடு கண்டு இரங்கியவாறாகக் கொள்க.
(118) அறையும் பொறையு மணந்த தலைய
எண்ணாட் டிங்க ளனைய
|