|
பழுனிய மட்டின் றேறல்
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து
நறுநெய்க் கடலை விசைப்பச் சோறட்டுப்
பெருந்தோ டாலம் பூசன் மேவர
வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ
இரும்பல் கூந்தன் மடந்தையர் தந்தை
ஆடுகழை நரலுஞ் சேட்சிமைப் புலவர்
பாடி யானாப் பண்பிற் பகைவர்
ஓடுகழற் கம்பலை கண்ட
செருவெஞ் சேஎய் பெருவிற னாடே.
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) அவனை அவர் பாடியது. (இ-ள்.) வெம்மை முதிர்ந்த வேங்கைமரத்தையுடைய சிவந்த மேட்டுநிலத்துக் கார்காலத்து மழையான் மிகுந்த பெரிய செவ்வியையுடைய ஈரத்தின்கட் புழுதி கலக்கப் பலசால்பட உழுது வித்தித் தாளியடிக்கப்பட்ட பல கிளையையுடைய செவ்வியின்கட் களையை அடியினின்றும் களைதலான் இலை தழைத்துப் பெருகி மெல்லிய மயிலினது ஈன்றணிய பேடையையொப்ப ஓங்கிக் கரிய தண்டு நீண்டு எல்லாம் ஒருங்கு சூல்விரிந்து கதிரினது அடியும் தலையும் ஒழியாமல் மிகக் காய்த்துச் சீரிதாக விளைந்த புதிய வரகையறுக்கத் தினையை யரிய எள்ளிளங்காய் கறுப்ப அவரையினது கொழுவிய கொடியின்கண் வெள்ளைக்காய் அறுக்கும் செவ்வியாக நிலத்தின்கட் புதைக்கப்பட்டு முற்றிய மதுவாகிய தேறலைப் புல்லாலே வேயப்பட்ட சிறியமனையின்கட் குடியுள்ள இடந்தோறும் நுகரக்கொடுக்க நறியநெய்யிலே கடலை துள்ள அதனோடு சோற்றையட்டு ஊட்டுதற்குப் பெரியதோளையுடைய மனையாள் கலம் பூசுதலைப் பொருந்த வருந்தவேண்டாத புதுவருவாயை யுடைத்து, முன்பு; இனி அது கெடும்போலும்! கரிய பலவாகிய கூந்தலையுடைய மடந்தையர்க்குத் தந்தையாகிய அசைந்த மூங்கில் இழைந்து ஒலிக்கும் உயர்ந்த உச்சியையுடைய, புலவர் பாடப்பட்டு அமையாத தன்மையையுடைய பகைவரது புறக்கொடுத்தோடும் வீரக்கழலினது ஆரவாரத்தைக் கேட்டு நாணிப் பின் செல்லாது கண்டுநின்ற போரை விரும்பிய சேயையொக்கும் பெரிய வென்றியையுடையவனது நாடு-எ - று. வித்தி ஆடிய செவ்வியென இயையும். நந்தியென்பது முதலாய வினையெச்சங்கள் விளைந்தவென்னும் பெய ரெச்சவினையோடும், அரியவென்பது முதலாக மேவரவென்பதீறாக நின்ற வினையெச்சங்கள் யாணர்த்தென்னும் குறிப்புவினையோடும் முடிந்தன. பகர்ந்தென்பது பகரவெனத் திரிக்கப்பட்டது. விசைப்
|