யானை தனது கொம்பினதிடையே வைக்கப்பட்ட கவளம் போல நமது கையகத்தது, அப்பரிசில்; அது தப்பாது; உண்ண ஆசைப்பட்ட நெஞ்சே! நீ பரிசிற்கு வருந்தவேண்டா; அவன்தாள் வாழ்வதாக-எ - று. அதியமான்விருப்பினனென முன்னே கூட்டுக. கோட்டிடைவைத்த கவளம்போலவென்றதற்கு யானைவாயிற் கொண்டு நுகரும் அளவும் கோட்டிடைவைத்த கவளம் போலப் பரிசில் கையகத்தது வென்க; அன்றிக் களிறுகோட்டிடைவைத்த கவளத்தைச் சிறிது தாழ்த்ததாயினும் அஃது அதற்குத் தப்பாதவாறுபோலப் பரிசில் சிறிது தாழ்ப்பினும் நமக்குத் தருதல் தப்பாதென்பதாக்கி உரைப்பினும் அமையும். தாளை முயற்சியென்பாரும் உளர். அருந்தவென்பது அருந்தெனக் கடைக்குறைக்கப்பட்டது; அருந்தென முன்னிலையேவலாக்கி உரைப்பினும் அமையும். (102) எருதே யிளைய நுகமுண ராவே சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே அவலிழியினு மிசையேறினும் அவண தறியுநர் யாரென வுமணர் கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன இசைவிளங்கு கவிகை நெடியோய் திங்கள் நாணிறை மதியத் தனையையிருள் யாவண தோநின் னிழல்வாழ் வோர்க்கே. திணை - அது; துறை - இயன்மொழி. (பாடாண்டிணை) அவன்மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது. (இ-ள்.) எருதுகள் இளையதாம் நுகம்பூண்டலை யறியா சகடந்தான் பண்டம் பெரிதாக இடப்பட்டது; ஆதலால், அது பள்ளத்தே இழியினும் மேட்டிலே ஏறினும் அவ்விடத்து வரும் இடையூறு அறிவார் யார்தானென்று நினைந்து உப்புவாணிகர் அச்சுமரத்தின் கண்ணே அடுத்துக் கட்டப்பட்ட சேமவச்சுப்போன்ற புகழ்விளங்கிய இடக்கவிந்த கையையுடைய உயர்ந்தோர்! நீ திங்களாகிய நாள்நிறைந்த மதியத்தை யொப்பை; ஆதலின், நின்நிழற்கண் வாழுமவர்கட்குத் துன்பமாகிய இருள் எவ்விடத்துள்ளது ?-எ - று. திங்கள் நாணிறைமதியத்தனையையென்றது, அறிவும் நிறைவும் அருளும் முதலாகிய குணங்களால் அமைந்தாயென்றவாறாம். சேமவச்சன்னவென்றது, ஏற்றிழிவுடையவழி அச்சுமுறிந்துழிச் சேமவச்சு உதவினாற்போல நீ காக்கின்ற நாட்டிற்கு ஓரிடையூறு உற்றால் அதுநீக்கிக் காத்தற்குரியை யென்பதாம். 'எருதே யிளைய நுகமுண ராவே, சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே' என்பது உவமங்கருதாது சகடத்திற்குவரும் ஏதங்குறித்து உமணர் சேமவச்சு யாத்தற்குக்காரணமாய் நின்றது. (103) ஒருதலைப் பதலை தூங்க வொருதலைத் தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக் கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச் சுரன்முத லிருந்த சில்வளை விறலி செல்வை யாயிற் சேணோ னல்லன் முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும் பகைப்புலத் தோனே பல்வே லஞ்சி பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பெருப்ப அலத்தற் காலை யாயினும் புரத்தல் வல்லன் வாழ்கவன் றாளே. திணை - அது; துறை - விறலியாற்றுப்படை. (பாடாண்டிணை) அதியமான் நெடுமானஞ்சியை அவர் பாடியது. (இ-ள்.) காவினது ஒருதலைக்கண்ணே பதலை தூங்க ஒருதலைக் கண்ணே துளையை அகத்தேயுடைய சிறிய முழாவைத் |