திணையும் துறையும் அவை. (நொச்சி, மகண்மறுத்தல்)
மூவேந்தரும் பறம்புமுற்றியிருந்தாரை அவர் பாடியது.
(இ-ள்.) வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் படையினையுடைய
மூன்று திறத்தீருங் கூடிப் பொருதீராயினும் பறம்பு கொள்ளுதற்கு
அரிது; முந்நூறு ஊரையுடைத்து, குளிர்ந்த நல்ல பறம்புநாடு;
அம்முந்நூறூரும் பரிசிலர் பெற்றனர்; நீயிர் பாடினிராய் வரின், நுமக்கு
யாமும் பாரியும் உள்ளேம்; அதுவேயன்றி மலையும் உண்டு-எ - று.
நீர் பாடிவரினும் பறம்புநாடு பரிசிலர் முன்னேபெற்றமையின், அது
நுமக்குக் கிடையாதென்பது கருத்தாகக் கொள்க.
அளிதோ தானே பேரிருங் குன்றே
வேலின் வேறல் வேந்தர்க்கோ வரிதே
நீலத், திணைமலர் புரையு முண்கட்
கிணைமகட் கெளிதாற் பாடினள் வரினே.
திணையும் துறையும் அவை. (நொச்சி, மகண்மறுத்தல்)
அவனை அவர் பாடியது.
(இ-ள்.) இரங்கத்தக்கது, பெரிய கரிய குன்றம்; அது வேலான்
வெல்லுதல் வேந்தர்க்கோ அரிது; நீலத்தினது இணைந்த
மலரையொக்கும் மையுண்ட கண்ணையுடைய கிணையையுடைய
விறலிக்கு எளிது, பாடினளாய் வரின்-எ - று.
அளிதோவென்றது ஈண்டு வியப்பின்கண் வந்தது.
பாடினளாய்வரினென்றகருத்து: அவட்கும் அவ்வாறன்றித் தன்
பெண்மையால் மயக்கி வென்றுகோடல் அரிதென்பதாம்.
(112) அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவின்
எந்தையு முடையேமெங் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெம்
குன்றுங் கொண்டார்யா மெந்தையு மிலமே.
திணை - பொதுவியல்; துறை - கையறுநிலை.
பாரிமகளிர் பாடியது.
(இ-ள்.) மூவேந்தரும் முற்றியிருந்த அற்றைத் திங்களின்
அவ்வெள்ளிய நிலாவின்கண் எம்முடைய தந்தையையும் உடையேம்;
எம்முடைய மலையையும் பிறர்கொள்ளார்; இற்றைத் திங்களது
இவ்வெள்ளிய நிலவின்கண் வென்று அறைந்த முரசினையுடைய அரசர்
எம்முடைய மலையையுங் கொண்டார்; யாம் எம்முடைய தந்தையையும்
இழந்தேம்-எ-று.
திங்களை மாதமென்பாரும் உளர்.
ஒருவனை மூவேந்தரும் முற்றியிருந்தும் வஞ்சித்துக்
கொன்றமையின்; ‘வென்றெறி முரசின்வேந்தர்' என்றது ஈண்டு
இகழ்ச்சிக் குறிப்பாய் நின்றது.
(113) மட்டுவாய் திறப்பவு மைவிடை வீழ்ப்பவும
அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்
பெட்டாங் கீயும் பெருவளம் பழுனி
நட்டனை மன்னோ முன்னே யினியே
பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர்வார் கண்ணேந் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
அவன்மகளிரைப் பார்ப்பார்ப்படுக்கக் கொண்டுபோவான் பறம்பு
விடுத்த கபிலர்