ஒன்றுடையையல்லையாயிருக்கவும் நீ பெரிய செருக்கினையுடையையாய் இராநின்றாய்; இதற்குக் காரணம் என்னை?-எ-று. ஏத்தினர்தரூஉமென்று பன்மையாற்கூறியது அவ்வேந்தன் அமைச்சரை. மூவருள் யான் ஒருவன்; எனக்குத் துப்பாகியரென அம்மூவரும் ஏத்தினர்தரூஉமென்று உரைப்பினும் அமையும். நாடு அந்தணரது; கூழ் இரவலரது; அரிவைதோளளவல்லதை நினக்கு உரித்தாகக் கூறுதற்கு யாதும் இல்லையாயிருந்தது; நீ பெருமிதத்தை யுடையையாயிருந்தாயென வியந்து கூறியவாறு.
(123) நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கு மெளிதே தேரீ தல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழா தீத்த விழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி யுறையினும் பலவே.
திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, இயன்மொழி) அவனை அவர் பாடியது. (இ-ள்.) நாட்காலையே மதுவையுண்டு நாளோலக்கத்து மகிழ்ச்சியை மகிழின், தேர்வழங்குதல் யாவர்க்கும் எளிது; கெடாத நல்லபுகழ் விளங்கும் மலையன் மதுநுகர்ந்து மகிழாது வழங்கிய பொற்படைகளால் அணியப்பட்ட உயர்ந்த தேர், பயன்பொருந்திய முள்ளூர்மலையுச்சியின் கண் உண்டாகிய மழையினது துளியினும் பல-எ - று. இதன்கருத்து: ஏனையோர்கொடை செயற்கையென்றும், இவன் கொடை இயற்கையென்றும் கூறியவாறு.
(124) நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குந ரல்லர் நெறிகொளப்
பாடான் றிரங்கு மருவிப்
பீடுகெழு மலையற் பாடி யோரே.
திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, இயன்மொழி) அவனை அவர் பாடியது. (இ-ள்.) நல்லநாளன்றாகப் போகிப் புள்நிமித்தம் இடையே நின்று தடுப்பச் செவ்வியன்றாகச் சென்றுகூடிக் கூறுபாடன்றாக முனியும் வார்த்தைகளைச் சொல்லினும் வறிதாக மீள்வாரல்லர், ஒழுங்குபட ஓசை நிறைந்து ஒலிக்கும் அருவியையுடைய பெருமைபொருந்திய மலையையுடையோனைப் பாடியவர்கள்-எ - று. மலையற்பாடியோர் வறிதுபெயர்குநரல்லரெனக் கூட்டுக. அன்றியென்பது அன்றெனத் திரிந்தது செய்யுளாகலின். வறிதென்னும் குறிப்புவினையெச்சம் பெயர்குநரல்லரென்பதனுட் பெயர்தலோடு முடிந்தது. வறியரென்றுரைப்பாரும் உளர்.
|