கோட்டின்கண் வாழும் மந்தி பரிசிலர் தூக்கிவைக்கப்பட்ட பிணிப்புப் பொருந்திய மத்தளத்தினது ஓசையினிய தெளிந்த கண்ணைப் பலாப்பழமென்று கருதித் தட்டினவிடத்து அதன்கண் வாழும் அன்னச்சேவல் அவ்வோசைக்கு மாறாக எழுந்து ஒலிக்கும் கழல இடப்பட்ட வீரவளையையுடைய ஆயது முகில் படியும் பொதியின்மலை, ஆடச்செல்லும் மகள் அணுகினல்லது பெருமை பொருந்திய அரசர் அணுகுதல் அரிது-எ - று. இது கொடைச்சிறப்பும் வென்றியும் கூறியவாறாயிற்று.
(129)
குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்கமைப் பழுனிய தேறன் மகிழ்ந்து
வேங்கை முன்றிற் குரவை யயரும்
தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன
ஆஅ யண்டிர னடுபோ ரண்ணல்
இரவலர்க் கீத்த யானையிற் கரவின்று
வான மீன்பல பூப்பி னானா
தொருவழிக் கருவழி யின்றிப்
பெருவெள் ளென்னிற் பிழையாது மன்னே.
திணை - அது; துறை - இயன்மொழி. (பாடாண்டிணை) அவனை அவர் பாடியது. (இ-ள்.) குறிய இறப்பையுடைய சிறிய மனையின்கட் குறமக்கள் வளைந்த மூங்கிற்குழாயின்கண் வார்த்திருந்து முதிர்ந்த மதுவை நுகர்ந்து வேங்கைமரத்தையுடைய முற்றத்தின்கட் குரவைக்கூத்தையாடும் இனிய சுளையையுடைத்தாகிய பலாமரத்தையுடைய பெரிய மலையை யுடையோன், ஆயாகிய அண்டிரன், கொல்லும் போரைச் செய்யும் தலைவன், அவன் இரப்போர்க்குக் கொடுக்கப்பட்ட யானைத் தொகை போல, மேகம் மறைத்தலின்றி ஆகாயம் பலமீனையும் பூக்குமாயின் அமையாது, ஓரிடத்தும் கரிய இடம் இல்லையாகப் பெருக வெண்மையைச் செய்யுமாயின் அம்மீன்றொகை அதனுக்குத் தப்பாது-எ - று. யானையிற் பிழையாதென இயையும். மன் : அசை.
(130)
விளங்குமணிக் கொடும்பூ ணாஅய் நின்னாட்
டிளம்பிடி யொருசூல் பத்தீ னும்மோ
நின்னுநின் மலையும் பாடி வருநர்க்
கின்முகங் கரவா துவந்துநீ யளித்த
அண்ணல் யானை யெண்ணிற் கொங்கர்க்
குடகட லோட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே.
திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, இயன்மொழி) அவனை
அவர் பாடியது. (இ-ள்.)
விளங்கிய மணிகளான் இயன்ற
வளைந்த பூணாகிய
ஆரத்தையுடைய ஆயே! நினது நாட்டின்கண் இளையபிடி ஒருகருப்பம்
|