புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   431
Zoom In NormalZoom Out


பாட்டையும்    சீர்தூக்கிப்  பெரிய  சுரஞ்சூழ்ந்த மலைபோல்வதொரு
பெரிய  யானையை  அளித்தான்;  ஆதலான்,  ஒருவற்கு  ஒன்றனைக்
கொடுக்குமிடத்து     அப்பெற்றிப்பட்டதொரு   தெளியாக்கொடையும்
உளதோ  தான்?  பெரியோர்  தாங்கள்  செய்யக்கடவ முறைமையைத்
தெரிந்து பாதுகாத்துச் செய்யார்கொல்?-எ - று.

பிறவென்பது அசைநிலை.

கொல்லென்பது பின்பும் கூட்டியுரைக்கப்பட்டது.

(141) பாணன் சூடிய பசும்பொற் றாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்

கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ

ஊரீர் போலச் சுரத்திடை யிருந்தனிர்

யாரீ ரோவென வினவ லானாக்

காரெ னொக்கற் கடும்பசி யிரவல

வென்வே லண்ணற் காணா வூங்கே

நின்னினும் புல்லியே மன்னே யினிே

இன்னே மாயினே மன்னே யென்றும்

வடாஅ போரா வாகுத லறிந்தும்

படாஅ மஞ்ஞைக் கீத்த வேங்கோ

கடாஅ யானைக் கலிமான் பேகன்

எத்துணை யாயினு மீத்த னன்றென

மறுமை நோக்கின்றோ வன்றே

பிறர், வறுமை நோக்கின்றவன் கைவண் மையே.

திணை  -  அது;  துறை - பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையுமாம்.
(பாடாண்டிணை)

வையாவிக்கோப் பெரும்பேகனைப் பரணர் பாடியது.

(இ-ள்.)   'பாணன்   சூடிய   ஓட்டற்ற    பொன்னாற் செய்யப்பட்ட
தாமரைப்பூ  மாட்சிமைப்பட்ட  அணியினையுடைய  விறலி  அணிந்த
பொன்னரிமாலையுடனே  (பொன்னரிமாலை   -  பொன்னை  மலராக
அரிந்து  தொடுத்தமாலை). விளங்கக் கடிய குதிரையைப் பூண்ட நெடிய
தேரைப்  பிணிப்பைவிட்டு  இளைப்பாறி  ஊரின்கண் இருந்தீர்போலச்
சுரத்திடை  யிருந்தீர்!  நீர்  யாவிர் பாணரோ' என எம்மைக் கேட்டல்
அமையாத    புல்லென்ற   சுற்றத்தையும்   மிக்க   பசியையுமுடைய
இரவலனே! வென்றி வேலையுடைய தலைவனைக் காண்பதன்முன் யாம்
நின்னினும்     வறியேம்;     இப்பொழுது     அவ்வறுமை   நீங்கி
இத்தன்மையேமாயினேம்;     எந்நாளும்     உடா   போராவாதலை
அறிந்துவைத்தும்  படாத்தினை  மயிலுக்குக்  கொடுத்த எம் இறைவன்,
மதமிக்க  யானையினையும்  மனஞ்செருக்கிய  குதிரையினையுமுடைய
பேகன்,   எவ்வளவாயினும்  கொடுத்தல்  அழகிதென்று  மறுபிறப்பை
நோக்கிற்றோவெனின்,  அன்று;  பிறரது  மிடியைக் கருதிற்று, அவனது
கைவண்மை-எ - று.