புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   432
Zoom In NormalZoom Out

காரணமாக அவனைக் கபிலர் பாடியது.

(இ-ள்.)  மலையை  மழைவந்து  சூழ்கவென்று  மிக்க பலியைத் தூவி
அம்மழை  மிகப்பெய்தலான்  அப்பெயல்  அமைந்து  முகில்  மேலே
போவதாக  வேண்டுமெனத் தெய்வத்தைப் போற்றிய குறமாக்கள் மழை
இடத்துமாறிய உவகையராய் மலைச்சாரற்கட் புனத்தினையை உண்ணும்
நாட!  சினத்தினாற்  செய்யும்போரையும்  கைவண்மையாற் கொடுக்கும்
கொடையினையுமுடைய விரைந்த குதிரையையுடைய பேக! அவ்வருளத்
தக்காள்,  யாரோதான்?  நெருநற்றுச்சுரத்தின்கண்ணே நடந்து வருந்திய
எனது   சுற்றம்   பசித்ததாக,  கடிப்பு  அறையப்பட்ட  முரசு  போல
ஒலிக்கப்பட்ட  அருவியையுடைய  பெரிய  உயர்ந்த  மலைக்கட் சிறிய
ஊராகிய  அவ்விடத்து  வாயிற்கண்ணே வந்து தோன்றி வாழ்த்திநின்று
நின்னையும்   நின்மலையையும்   பாட,  அப்பொழுது  இன்னாதாகச்
சொரியப்   பட்ட   கண்ணீரை   ஒழித்தல்மாட்டாளாய்  அக்கண்ணீர்
முலையிடத்தை  நனைப்பப்  பொருமிக்  குழல் இரங்கி ஒலிப்பதுபோல்
அழுதாள், மிகவும்-எ - று.
 

மழை   வேண்டுங்காலத்துப்    பெய்வித்தற்கும்   வேண்டாக்காலத்து
ஒழித்தற்கும் பலி தூஉய்ப் பேணிய குறவராகிய மாக்களென்க.
 

குறவர்மாக்கள் : இருபெயரொட்டுப்பண்புத்தொகை. 

மாக்கள்  புனத்தினை   அயிலும்  நாட! பேக! என் ஒக்கல் பசித்தென
வாயிற்றோன்றி  வாழ்த்திநின்று  நின்னும்  நின்மலையும் பாடக் குழல்
இனைவதுபோல  அழுதாள்;  அவ்வளிக்கத்தக்காள் யார்கொல்? அவள்
பால் அருள்பண்ணத்தகுமென வினைமுடிக்க.
 

இது    நின்மலையிற்குறவர்மாக்கள்  கடவுட்பேணி    மழைவேண்டிய
பொழுது பெற்றுத் தாம் வேண்டுமுணவு நுகருமாறுபோல் இவளும் நின்
அருள்பெற்று  இன்பம் நுகர்வாளாகவேண்டுமென்பதொரு நயந்தோன்ற
நின்றது.
 

மழை மிகப்பெய்தலானென்பது ஆற்றலாற் கூறப்பட்டது.

பேகனால்  துறக்கப்பட்ட   கண்ணகியை  அவனோடு  கூட்டலுறுவார்,
அருள்பண்ணவேண்டுமென்று     இரந்துகொண்டு     கூறினமையின்,
குறுங்கலியாயிற்று.

(144) அருளா யாகலோ கொடிதே யிருள்வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின்
காரெதிர் கானம் பாடினே மாக
நீனறு நெய்தலிற் பொலிந்த வுண்கண்
கலுழ்ந்துவா ரரிப்பனி பூணக நனைப்ப
இனைத லானா ளாக விளையோய்
கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென
யாந்