சொன்னார்கள்; இவ்வாறு இளையோளும் ஆயத்தாரும் உறும் துன்புறவு தீர்த்து அருளாயாதல் கொடிதென உரைப்பினும் அமையும்.
(145) மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப்
படாஅ மீத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக
பசித்தும் வாரேம் பாரமு மிலமே
களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி
அறஞ்செய் தீமோ வருள்வெய் யோயென
இஃதியா மிரந்த பரிசிலஃ திருளின்
இனமணி நெடுந்தே ரேறி
இன்னா துறைவி யரும்படர் களைமே.
திணையும் துறையும் அவை. (பெருந்திணை, குறுங்கலி) அவனை அவள் காரணமாக அவர் பாடியது. (இ-ள்.) மெல்லிய தகைமையையுடைய கரிய மயில் குளிரால் நடுங்குமென்று அருள்செய்து படாம் கொடுத்த அழியாத நல்ல புகழினை யுடைய மதம்பட்ட யானையையும் மனஞ்செருக்கிய குதிரையையுமுடைய பேக! யாம் பசித்தும் வருவேமல்லேம்; எம்மாற் பரிக்கப்படுஞ் சுற்றமுமுடையேமல்லேம்; களாப்பழம்போன்ற கரிய கோட்டையுடைய சிறிய யாழை இசையின்பத்தை விரும்பியுறைவார் அவ்விசையின்பத்தால் தலையசைத்துக் கொண்டாடும்படி வாசித்து, அறத்தைச் செய்வாயாக அருளை விரும்புவோயென இது நின்பால் யாம் இரந்த பரிசில்: இற்றையிரவின்கண் இனமாகிய மணியையுடைய உயர்ந்த தேரை ஏறிப்போய்க் காண்டற்கு இன்னாதாக உறைகின்றவள் பொறுத்தற்கரிய நினைவாலுண்டாகிய நோயைத் தீர்ப்பாயாக-எ - று. பேக! தேரேறி இன்னாதுறைவி அரும்படர் களை; யாழைப் பண்ணி யாம் இரந்த பரிசில் இதுவெனக் கூட்டுக. இதுவென்றது, அப்படிப் படர் களைதலை. 'மடத்தகை மாமயில் பனிக்குமென்றருளிப், படாஅ மீத்த...... பேக' என்ற கருத்து: இவ்வாறு ஒரு காரணமின்றியும் அருள்பண்ணுகின்ற நீ நின்னால் வருந்துகின்ற இவட்கு அருளாதொழிதல் தகாதென்பதாம். இனி, அருள்வெய்யோய்! யாம் இரந்த பரிசில், அறஞ்செய்யவேண்டு மென்று கூறும் இது; அவ்வறந்தான் யாதென்று கேட்பின், நின்பால் அருள் பெறாமையின் இன்னாதுறைவி அரும்படரை
|