கூடு விளங்கும் அகலிய நகரின்கண் இருந்து சூழ்ந்திருந்த பரிசிலர்க்கு அளித்து (ஈந்து) விடுத்தலால், பிறர்க்கீயும் பெருமையில்லாத அரசரைப்புகழும் புகழ்ச்சியை விரும்பி அவ்வரசர் செய்யாதனவற்றைச் சொல்லி அவர் குணங்களைக் கூறுதலை அறியாததாயிற்று, எம்முடைய சிறிய செவ்விய நா-எ - று. பொய்கூறாமையிற் ‘செந்நா' என்றார்; தற்புகழ்ந்தாராகாமற் 'சிறுசெந்நா' என்றார். அருவியவென்பது விகாரம். நள்ளி! நீ பரிசின்முற்றளித்தலான், எம் சிறுசெந்நா நின்நசைவளனேத்தி மன்னரைப் புகழ்ச்சிவேண்டிக் கிளத்தல் எய்யாதாகின்றெனக் கூட்டுக. நின் நசைவளன் ஏத்திக் கொணர்ந்து முற்றளித்தலாலெனப் பரிசிலர் மேலேற்றி உரைப்பினும் அமையும்.
(149)
நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவெமர் மறந்தன ரதுநீ
புரவுக்கடன் பூண்ட வண்மை யானே.
திணை - அது; துறை - இயன்மொழி. (பாடாண்டிணை) அவனை அவர் பாடியது. (இ-ள்.) நள்ளி! வாழ்வாயாக; நள்ளி! நள்ளென்னும் ஓசையையுடைய மாலைப்பொழுதின்கண்ணே மருதமென்கின்ற பண்ணை வாசித்துக் காலைப்பொழுதின்கண் கைவழியாகிய யாழின்கட் செவ்வழியென்னும் பண்ணைவாசித்து வரலாற்றுமுறைமையை எம்முடைய பாணர் சாதியிலுள்ளோர் மறந்தார்; அவ்வாறு மறந்தது, நீ கொடுத்து ஓம்புதலைக் கடனாக மேற்கொண்ட வண்மையான்-எ - று. கையகத்து எப்பொழுதும் இருத்தலான், யாழைக் கைவழியென்றார், ஆகுபெயரான். 'வரவவர் மறந்தனர்' என்பதூஉம் பாடம்.
(150)
கூதிர்ப் பருந்தி னிருஞ்சிற கன்ன
பாறிய சிதாரேன் பலவுமுதற் பொருந்தித்
தன்னு முள்ளேன் பிறிதுபுலம் படர்ந்தவென்
உயங்குபடர் வருத்தமு முலைவு நோக்கி
மான்கணந் தொலைச்சிய குருதியங் கழற்கால்
வான்கதிர்த் திருமணி விளங்குஞ் சென்னிச்
செல்வத் தோன்றலோர் வல்வில் வேட்டுவன்
தொழுதன னெழுவேற் கைகவித் திரீஇ
இழுதி னன்ன வானிணக் கொழுங்குை
கானதர் மயங்கிய விளையர் வல்லே
தாம்வந் தெய்தா வளவை யொய்யெனத்
தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டுநின்
இரும்பே ரொக்கலொடு தின்மெனத் தருதலின்
அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி
நன்மர னளிய நறுந்தண் சாரற்
கன்மிசை யருவி தண்ணெனப் பருகி
|