| விடுத்த றொடங்கினே னாக வல்லே பெறுதற் கரிய வீறுசா னன்கலம் பிறிதொன் றில்லைக் காட்டுநாட் டேமென மார்பிற் பூண்ட வயங்குகா ழாரம் மடைசெறி முன்கைக் கடகமோ டீத்தனன் எந்நா டோவென நாடுஞ் சொல்லான் யாரீ ரோவெனப் பேருஞ் சொல்லான் பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே இரும்புபுனைந் தியற்றாப் பெரும்பெயர்த் தோட்டி அம்மலை காக்கு மணிநெடுங் குன்றிற் பளிங்குவகுத் தன்ன தீநீர் நளிமலை நாட னள்ளியவ னெனவே. திணை - அது; துறை - இயன்மொழி. (பாடாண்டிணை) அவனை அவர் பாடியது. (இ-ள்.) கூதிர்க்காலத்துப் பருந்தினது கரிய சிறகையொத்த துணியாகிய சீரையையுடையேனாய்ப் பலாவடியைப் பொருந்தி, தன்னையும் நினையேனாய் வேற்றுநாட்டின்கட்சென்ற எனது ஓய்ந்த செலவானுளதாகிய வருத்தத்தினையும் மிடியையும் பார்த்து மானினது திரளைத் தொலைத்த, குருதிதோய்ந்த அழகிய வீரக்கழலினையுடைய காலினையும் வாலிய ஒளியையுடைய அழகிய நீலமணிவிளங்கும் உச்சியையுமுடைய செல்வத்தையுடைய தலைவனாகிய ஒரு வலிய வில்லினையுடைய வேட்டுவன், தன்னை அஞ்சலி பண்ணினேனாய் எழுந்திருப்பேனைக் கைகவித்து இருத்தி நெய்யிழுதுபோன்ற வெள்ளிய நிணத்தையுடைய கொழுவிய தடியைக் காட்டுவழியின்கண் வழிமயங்கிப்போகிய இளையர் தாம் விரையவந்து பொருந்துவதற்குமுன்னே கடிதாகத் தான்கடைந்த தீயான் விரைந்து சுட்டு நினது மிகப்பெரிய சுற்றத்துடனே தின்மினென்று தருதலான் அதனை யாங்கள் அமிழ்துபோலத் தின்று சுடுகின்ற பசி தீர்ந்ததாக, நல்ல மரச்செறிவையுடைய நறிய குளிர்ந்த மலைச்சாரற் கண் மலையுச்சியினின்றும் வீழ்ந்த அருவிநீரைக் குளிரக் குடித்து விடை கொள்ளத் தொடங்கினேனாக, விரைய வந்து பெறுதற்கரிய பெருமை யமைந்த நல்ல அணிகலங்கள் தருதற்கு வேறோன்றில்லை, யாம் காட்டு நாட்டின்கண்ணே மெனச்சொல்லித் தனது மார்பிற் பூணப்பட்ட விளங்கிய முத்துவடங்களையுடைய ஆரத்தைக் கொளுத்துச் செறிந்த முன்கைக்கு அணிந்த கடகத்துடனே தந்தனன்; நும்முடைய நாடு எந்நாடோவென்று கேட்ப நாடும் சொல்லிற்றிலன்; நீர் யாரெனக் கேட்பப் பெயரும் சொல்லிற்றிலன்; அவன்நாடும் பெயரும் பிறர்பிறர் வழியின் கண்ணே சொல்லக்கேட்டேன் யான்; இரும்பாற் புனைந்து செய்யப்படாத மிக்க புகழையுடைய தோட்டியாகிய அம்மலையைக் |